சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பலஸ்தீன பகுதியில் உத்தியோகபூர்வ விசாரணைகளை ஆரம்பித்தது - News View

About Us

About Us

Breaking

Friday, March 5, 2021

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பலஸ்தீன பகுதியில் உத்தியோகபூர்வ விசாரணைகளை ஆரம்பித்தது

பலஸ்தீன பிரதேசங்களில் இடம்பெற்றதாக குற்றம் சாட்டப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தியோகபூர்வ விசாரணை ஒன்றை ஆரம்பித்திருப்பதாக அந்த நீதிமன்றத்தின் தலைமை வழக்குத்தொடுநர் பதூ பென்சௌதா தெரிவித்துள்ளார்.

2014 ஜூன் தொடக்கம் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குக் கரை, கிழக்கு ஜெரூசலம் மற்றும் காசா பகுதிகளில் இடம்பெற்ற போர் குற்றங்கள் குறித்தே விசாரிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

பலஸ்தீன பிரதேசங்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்ட பகுதிகள் என்று ஹேகை தளமாகக் கொண்ட அந்த நீதிமன்றம் கடந்த மாதம் அறிவித்தது.

இந்நிலையில் பென்சௌதாவின் முடிவை இஸ்ரேல் நிராகரித்திருக்கும் அதேநேரம் பலஸ்தீன அதிகாரிகள் அதனை வரவேற்றுள்ளனர்.

இந்த நகர்வை எதிர்த்திருக்கும் அமெரிக்கா தனது ஏமாற்றத்தையும் வெளியிட்டுள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஸ்தாபக ஒப்பந்தமான ரோம் பிரகடனத்திற்கு அமைய இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றச் செயல் மற்றும் போர் குற்றங்கள் தொடர்பில் வழக்குத் தொடர அதிகாரம் உள்ளது.

ரோம் பிரகடனத்தை இஸ்ரேல் அங்கீகரிக்காத போதும், பலஸ்தீனம் இந்த ஒப்பந்தத்தில் இணைந்ததை 2015 இல் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அங்கீகரித்த நிலையில் அந்தப் பிரதேசம் தமது வரம்புக்கு உட்பட்டிருப்பதாக குற்றவியல் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

1967 மத்திய கிழக்கு யுத்தத்திலேயே மேற்குக் கரை, காசா மற்றும் கிழக்கு ஜெரூசலத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. இந்தப் பிரதேசங்கள் தமது எதிர்கால சுதந்திர நாடாக அமையவுள்ளது என்று பலஸ்தீனம் கூறுகிறது.

ஆரம்ப கட்டமாக காசா பகுதியில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைள் மற்றும் பெரும்பாலான சர்வதேச சமூகம் அங்கீகரிக்காத மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேற்றங்கள் பற்றி சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2014 இல் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன போராளிகளுக்கு இடையே இடம்பெற்ற போரில் 1,462 பொதுமக்கள் உட்பட 2,251 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு இஸ்ரேல் தரப்பில் 67 படையினர் மற்றும் ஆறு பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

No comments:

Post a Comment