(எம்.நியூட்டன்)
வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்களை நவீனமயப்படுத்தல் தொடர்பிலான இரண்டு நாள் ஆய்வரங்கில் பங்குகொண்ட வடக்கு மாகாணத்தின் அதி உயர் பதவிகளில் உள்ள அதிகாரிகள் தொடக்கம் பிரதேச சபைத் தவிசாளர்கள் வரையில் பெருமளவானவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
யு.என்.டி.பி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியில் உள்ளூராட்சி மன்றங்களை நவீனமயப்படுத்தல் தொடர்பிலான ஆய்வரங்கு யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் கடந்த 23, 24ஆம் திகதிகளில் நடைபெற்றுள்ளது.
குறித்த விடுதியிலேயே 2 நாட்கள் அதிகாரிகள் தங்கியிருந்து ஆய்வரங்கில் பங்குகொண்டதுடன் விருந்துபசாரங்களிலும் பங்கேற்றிருக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று புதன்கிழமை தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்ட யாழ். மாநகர முதல்வர் வி. மணிவண்ணன் நேற்று பிற்பகல் வரையில் குறித்த கூட்டத்தில் பங்குகொண்டதுடன் அங்கு பல்வேறு கலந்துரையாடல்கள் மற்றும் விருந்துபசாரத்திலும் பங்கேற்றிருக்கின்றார்.
குறித்த ஆய்வரங்கில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், உள்ளூராட்சி மன்றங்களின் ஆணையாளர்கள், தவிசாளர்கள், யாழ். மாநகர ஆணையாளர் உட்பட்ட வடக்கின் உயர் அதிகாரிகள் வடக்கின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த வடக்கு மாகாண நிர்வாக சேவைக்கு உட்பட்ட அதிகாரிகள் எனப் பலர் பங்குகொண்டிருந்திருக்கின்றனர்.
இந்நிலையில் பிரதேச பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களால் குறித்த ஆய்வரங்கில் பங்கு கொண்டவர்களில் பலர் தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நிகழ்வில் பங்கேற்றவர்களில் ஒரு அதிகாரி தெரிவித்தார்.
No comments:
Post a Comment