இலங்கை முழுவதும் 13 சதவீதமான தென்னைகள் காணப்பட்ட போதும் அதில் 3 வீதமான தென்னை உற்பத்தியில் இருந்து பயன்களை பெற முடிகிறது எனவும் இளைஞர்கள் முயற்சி செய்தால் தென்னை பனை சார் உற்பத்தியிலிருந்து அதிக பயனைப் பெற முடியும் என இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணாண்டோ குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்ட தென்னை, கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை மேம்பாடு மற்றும் அவை சார்ந்த கைத்தொழில் பண்டங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணாண்டோ நேற்று (05) காலை கைதடியில் அமைந்துள்ள பனை ஆராய்ச்சி நிலையத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டார்.
இவ்விஜயத்தின் போது யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் பங்கேற்றிருந்தார்.
அவர் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் இளைஞர்களை ஊக்கிவித்து அதனூடாக வருங்காலத்தில் பனை உற்பத்தி பொருட்களை அதிகரிக்க முடியும் எனவும் எந்த ஒரு பாகுபாடும் இன்றி இளைஞர்கள் பனம் கள்ளு உற்பத்தி செய்வதற்கு முன் வரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்!
பனை கள்ளு இறக்கும் தொழிலில் ஈடுபடுபவர்கள் காலை 11 மணிக்கு பின் தொழில் ஈடுபட முடியாத நிலை காணப்பட்டது, அவ்வாறான நிலையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை பனை சார் தொழிலாளர்கள் சார்பாக அங்கஜன் இராமநாதனால் அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டது.
காலை 11 மணிக்கு பின் தொழில் ஈடுபடுபவர்களுக்கு தண்ட பணம் பெறப்பட்ட நிலையில் அந்த நிலை இனிவரும் காலங்களில் நடைபெறாது எனவும், இது தொடர்பாக பொலிஸ்மா அதிபருக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்தார்!
பனை உற்பத்தி பொருட்களை இலங்கை சர்வதேச விமான நிலையங்களில் விற்பனை செய்ய தீர்மானித்து இருப்பதாகவும் கனடா, ஜேர்மன், டுபாய் ஆகிய நாடுகளில் எமது பனை, தென்னை உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் அங்கஜன் இராமநாதனுடன் இணைந்து செயற்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கண்டி, குருநாகல் ஆகிய மாவட்டங்களில் பனை உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் காட்சி அறை உருவாக்க இருப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.
இவ்விஜயத்தின் போது பனை, தென்னை சம்மந்தமான உற்பத்தியாளர்கள், சம்மந்தப்பட்ட தரப்பினர்கள் என பலர் பங்கேற்று தமது கருத்துக்களை அமைச்சருடன் பரிமாறி கொண்டனர்.
இந்த கலந்துரையாடலில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், வட மாகாண பனை அபிவிருத்தி சபையின் தலைவர், சம்மந்தப்பட்ட அதிகாரிகள், தொழிலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment