நாட்டை வெற்றி பெறச் செய்யும் கொள்கை திட்டங்களின் மீதே எதிர்க்கட்சி தாக்குதல் தொடுத்துள்ளது, அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து செல்ல கைகோருங்கள் : ஜனாதிபதி உள்ளூராட்சி பிரதிநிதிகளிடம் தெரிவிப்பு - News View

Breaking

Post Top Ad

Saturday, March 27, 2021

நாட்டை வெற்றி பெறச் செய்யும் கொள்கை திட்டங்களின் மீதே எதிர்க்கட்சி தாக்குதல் தொடுத்துள்ளது, அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து செல்ல கைகோருங்கள் : ஜனாதிபதி உள்ளூராட்சி பிரதிநிதிகளிடம் தெரிவிப்பு

அரசாங்கத்தின் கொள்கைத் திட்டங்கள் மற்றும் அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து செல்ல பலமாக கைகோர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளூராட்சி பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.

இன்று எதிர்க்கட்சி நாட்டை வெற்றி பெறச் செய்யும் கொள்கை திட்டங்களுக்கு எதிராகவே தாக்குதல் தொடுத்திருக்கிறது. அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்துள்ள எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்து அபிவிருத்தி பணிகளை தொடர வேண்டும். அரசாங்கத்தின் திட்டங்களை முறையாக செயற்படுத்துவதன் மூலம் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.

நேற்று (27) பிற்பகல் பத்தரமுல்லையில் உள்ள தியத உயன வளாகத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்த கருத்துக்களை தெரிவித்தார். மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களைச் சேர்ந்த உள்ளூராட்சி பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.

தனிநபர்களை அல்லாமல், அரசாங்கத்தின் கொள்கைகளை முன்னிலைப்படுத்த அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும். கொள்கைகள் தோல்வியுற்றால் நாடு மீண்டும் அழிவுக்குள்ளாவதை தவிர்க்க முடோது. அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு அளித்த ஆதரவையும் அர்ப்பணிப்பையும் அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை முன்னெடுப்பதில் அனைவரிடமிருந்தும் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கூறினார்.

"சுபீட்சத்தின் பார்வை" கொள்கை திட்டத்தின் முக்கிய நோக்கம் வறுமையை ஒழிப்பதும் மக்களுக்கு சுபீட்சத்தை ஏற்படுத்துவதும் ஆகும். வறுமையை ஒழிப்பதிலும், குறைந்த வருமானம் உடையவர்களை மேம்படுத்துவதிலும் அரசாங்கம் ஒரு பாரிய வேலைத்திட்டத்தை செய்து வருகிறது. இந்த ஐந்து ஆண்டுகளில் கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்குவதற்கும் உறுதிபூண்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

உள்ளூராட்சி பிரதிநிதிகள் மக்களின் பிரச்சினைகள் குறித்து பரந்த புரிதலைக் கொண்டுள்ளனர். கிராம அபிவிருத்தி திட்டத்தில் இது மிகவும் முக்கியமானது என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல், நிர்வாக ரீதியாகவும் தலைமைத்துவத்தை வழங்கி கிராம அபிவிருத்தி திட்டத்தின் வெற்றிக்கு உதவவுமாறு கேட்டுக் கொண்டார்.

அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக எதிர்க்கட்சி பல்வேறு போலிப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. கிராமங்களுக்குச் சென்று கிராமங்களின் வளர்ச்சியுடன் இணைந்து பொய்யான பிரச்சாரத்தை சரிசெய்ய பணியாற்றுமாறு உள்ளூராட்சி பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

யார் என்ன சொன்னாலும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்துகிறது. 2030 க்குள் மீள்பிறப்பாக்க சக்திவள பயன்பாட்டை 70% ஆக உயர்த்துவது, ஒவ்வொரு ஆண்டும் இரசாயன உரங்களின் பயன்பாட்டை 25% குறைத்தல், செம்பனை செய்கையை தடை செய்வது உள்ளிட்ட பல முக்கியமான முடிவுகள் சுற்றுச்சூழலை கருத்திற்கொண்டு எடுக்கப்பட்டுள்ளன என்பதை ஜனாதிபதி நினைவுபடுத்தினார்.

உலக வங்கியின் உதவியுடன் செயற்படுத்தப்பட்டு வரும் ‘புர நெகும’ திட்டத்தின் மூன்றாம் கட்டம் விரைவில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்ளூராட்சி நிறுவனங்களின் பல குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முடியும் என்று பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு தேவையான கனரக வாகனங்கள் உள்ளிட்ட இயந்திரங்கள் இல்லாததால் உருவாகியிருக்கும் பிரச்சினைக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வு காணப்படும் என்றும் பெசில் ராஜபக்ஷ கூறினார். சமூக சங்கங்களுக்கு வழங்கப்படும் நிதியையும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன், அமைச்சர் பிரசன்ன ரனதுங்க, இராஜாங்க அமைச்சர்களான ரொஷான் ரணசிங்க, டீ. வீ. சானக, பாராளுமன்ற உறுப்பினர்களான உதேனி அத்துகோரல, சுமித் உடுகும்புர, சாகர காரியவசம், மிலான் ஜயதிலக, மதுர விதானகே, ஜயந்த கெடகொட மற்றும் சுதத் மஞ்சுல ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad