முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேரின் பிணை கோரிக்கை மீதான தீர்ப்பு நாளை - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 31, 2021

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேரின் பிணை கோரிக்கை மீதான தீர்ப்பு நாளை

(எம்.எப்.எம்.பஸீர்)

மத்திய வங்கி பிணை மோசடி நடவடிக்கை ஒன்றூடாக அரசாங்கத்துக்கு 1,500 கோடி ரூபா நட்டம் ஏற்படுத்திய விவகாரம் தொடர்பிலான 2 ஆவது வழக்கிலும் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பிரதிவாதிகளையும் நாளை முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் இன்றையதினம் உத்தரவிட்டது.

கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி மத்திய வங்கியின் முறிகள் ஏலத்தின் போது இடம்பெற்ற மோசடி தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், உள்ளிட்ட 8 பேருக்கும் பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்துக்கும் எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை விசாரிக்க மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா தலைமையில் நாமல் பண்டார பலல்லே மற்றும் ஆதித்ய பட்டபெத்தி ஆகிய நீதிபதிகளை உள்ளடக்கிய சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று வரை பிரதிவாதிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், பிரதிவாதிகளுக்கு பிணையளிப்பதா இல்லையா என்பது குறித்த சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை அறிவிக்க, கால அவகாசம் கோரப்பட்டிருந்தது.

அதன்படி இன்று சட்டமா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நாவான, பிரதிவாதிகளுக்கு பிணை வழங்க கடும் ஆட்சேபனை முன்வைத்தார்.

பிரதிவாதிகள் விஷேட காரணியாக முன்வைத்த மருத்துவ அறிக்கைகளை ஏற்க முடியாது எனவும், அவை சுயாதீனமான மருத்துவ நிபுணர் குழுவால் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் கோரினார்.

இந்நிலையில் அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம், பிணை குறித்த தீர்ப்பை நாளை காலை 9.00 மணிக்கு அறிவிப்பதாக தெரிவித்தது. அதுவரை பிரதிவாதிகளை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad