வடக்கு மாகாணத்தில் இரண்டு மாதங்களில் 841 பேருக்கு கொரோனா தொற்று! - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 2, 2021

வடக்கு மாகாணத்தில் இரண்டு மாதங்களில் 841 பேருக்கு கொரோனா தொற்று!

வட மாகாணத்தில் இவ்வாண்டின் ஜனவரி மாதத்தில் 563 பேரும், பெப்ரவரி மாதத்தில் 278 பேரும் கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர் என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பெப்ரவரி மாதத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 128 பேரும், மன்னார் மாவட்டத்தில் 85 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 44 பேரும், வவுனியா மாவட்டத்தில் 14 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 7 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் 61 கைதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

வட மாகாணத்தில் பெப்ரவரி மாதத்தில் 16,427 பேரிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 11,126 பரிசோதனைகளும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் 5,301 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று ஆரம்பித்த கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் இன்று வரை வட மாகாணத்தில் 1,089 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 349 பேர் யாழ்ப்பாணம் மாவட்டத்திலும், 376 பேர் வவுனியா மாவட்டத்திலும், 267 பேர் மன்னார் மாவட்டத்திலும், 78 பேர் கிளிநொச்சி மாவட்டத்திலும், 19 பேர் முல்லைத்தீவு மாவட்டத்திலும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதுவரை வட மாகாணத்தில் கொரோனா தொற்றால் 5 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன. மன்னார் மாவட்டத்தில் 3 இறப்புக்களும், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தலா ஒவ்வொரு இறப்புக்களும் ஏற்பட்டுள்ளன.

வட மாகாணத்தில் 8,636 சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதுடன் தனியார்துறை மருத்துவப் பணியாளர்கள், மருத்துவபீட விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் யாவும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment