வெட்டவெளியாக்கப்பட்டதாக கூறப்படும் 7 ஏக்கர் நிலப்பரப்பை சிங்கராஜ வனத்துக்கு உரித்துடையதாக்க தீர்மானம் - அமைச்சர் மஹிந்த அமரவீர - News View

Breaking

Post Top Ad

Friday, March 19, 2021

வெட்டவெளியாக்கப்பட்டதாக கூறப்படும் 7 ஏக்கர் நிலப்பரப்பை சிங்கராஜ வனத்துக்கு உரித்துடையதாக்க தீர்மானம் - அமைச்சர் மஹிந்த அமரவீர

(எம்.எம்.சில்வெஸ்டர்)

சிங்கராஜ வனத்துக்குரிய நிலப்பரப்பொன்றை வெட்டவெளியாக்கி ஹோட்டல் ஒன்றை நிர்மானிப்பதற்கு ஆயத்தமாக இருந்ததாக கூறப்படும் 7 ஏக்கர் நிலப்பரப்பை சிங்கராஜ வனத்துக்கு உரித்துடையதாக்கிக் கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த நிலப்பரப்பைத் தவிரவும், மேலும் 1,500 ஏக்கர் நிலப்பரப்பையும் சிங்கராஜ வனத்துக்கு உரித்துடையாக்கிக் கொள்வதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. தற்போது இந்த நிலப்பரப்பில் 135 குடும்பங்கள் வசிப்பதாகவும் அவர்கள் தொடர்பில் அவதானம் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஹோட்டலொன்று நிர்மானிக்கப்பட்டு வரும் நிலத்தின் உரிமைப் பத்திரங்களின் தெளிவுத்தன்மை குறித்து விரிவான விசாரணையொன்றை நடத்த எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

குறித்த நிலப்பபரப்பில் பெறுமதி வாய்ந்த மரங்கள் இருந்திருப்பின், அவற்றை வெட்டுவதற்கான அனுமதியை மத்திய சுற்றாடல் அதிகார சபையிடமிருந்து பெறப்படவில்லை என உறுதியாகியுள்ளது. அத்துடன், இரத்தினபுரி மாவட்ட செயலாளர் காரியாலயத்திலிருந்தும் அதற்கான அனுமதி வழங்கவில்லை எனவும் உறுதியாகியுள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் வரையில் தமது கடமைகளை செய்யாதமை தொடர்பில் பிரதேச செயலாளர் மற்றும் கிராம சேவகர் பொறுப்பு கூற வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், எதிர்வரும் வாரத்தில் இது தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த அமைச்சர், இந்த நிலப்பரப்பு தொடர்பில் உரிமை கோரும் நபர்கள் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தால், தகுதி தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், இந்த நிலத்துக்கு சொந்தமான பகுதியில் பெறுமதியான மரங்களை வெட்டி அப்புறப்படுத்தல் தொடர்பாக விசாரணை நடத்தப்படுமெனவும், அவர்கள் உரிய அனுமதியின்றி பெறுமதியான மரங்களை வெட்டியிருப்பின் அதற்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யும் பொறுப்பை நாம் ஏற்போம் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad