(செ.தேன்மொழி)
கொழும்பு, கிரேண்ட்பாஸ் மற்றும் வெலிகம பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ஹெரோயின் போதைப் பொருளுடன் 30 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து ஒரு கிலோ 152 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர் பிரான்ஸில் உள்ள போதைப் பொருள் கடத்தல்காரர் ஒருவரின் போதைப் பொருட்களையே கடத்தி வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குற்றப் புலனாய்வு பிரிவினர் சந்தேகநபரை மேலதிக விசாரணைகளுக்காக முகத்துவராம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
வெலிகம பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 15 கிராம் ஐஸ் போதைப் பொருளும், 5 கிராம் ஹெரோயின் போதைப் பொருளும் அவர் பயன்படுத்திய கார் மற்றும் 54, 800 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு தற்போது வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ள 'ஹரக் கட்டா' எனப்படும் சந்தேக நபரின் உதவியலாளராகவும் இவர் செயற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment