ஏப்ரல் தாக்குதலை மேற்கொள்ள 52 நாள் அரசியல் சதித்திட்டமே வாய்ப்பாக அமைந்தது - சஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது யார் என்பதை வெளிப்படுத்த வேண்டும் : ஹரின் பெர்ணான்டோ - News View

Breaking

Post Top Ad

Saturday, March 27, 2021

ஏப்ரல் தாக்குதலை மேற்கொள்ள 52 நாள் அரசியல் சதித்திட்டமே வாய்ப்பாக அமைந்தது - சஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது யார் என்பதை வெளிப்படுத்த வேண்டும் : ஹரின் பெர்ணான்டோ

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஏப்ரல் தாக்குதலை மேற்கொள்ளவதற்கு 52 நாள் அரசியல் சதித்திட்டமே வாய்ப்பாக அமைந்தது. அத்துடன் 2014 முன்னர் சஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது யார் என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஏப்ரல் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஏப்ரல் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் அல்ல என்பதை நான் ஆரம்பத்தில் இருந்து தெரிவித்து வருகின்றேன். இதற்காக சஹ்ரான் பாவிக்கப்பட்டுள்ளார். சஹ்ரானுக்கு இந்த அரசாங்கத்துக்கும் இருந்த தொடர்பு வெளிப்பட்டு வருகின்றது.

புலனாய்வு தகவல்களை வழங்குவதற்காக சஹ்ரானுக்கு நாங்கள்தான் சம்பளம் வழங்கியதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தொலைக்காட்சி உரையாடல் ஒன்றின் போது பகிரங்கமாக தெரிவித்திருந்தார். அப்படியெனில் 2014 க்கு முன்னர் சஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது யார் என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.

மேலும் ஏப்ரல் தாக்குதலை மேற்கொள்ள 2018 இடம்பெற்ற 52 நாள் அரசியல் சதித்திட்டம் வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த காலப்பகுதியில்தான் தாக்குதலுக்கான முன்னேற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. 2018 இல்தான் வவுணதீவில் இரண்டு பொலிஸார் கொலை செய்யப்பட்டனர். அதனை புலிகளின் மீது சுமத்தி மறைக்க முற்பட்டனர். அதனைத் தொடர்ந்து மாவனெல்லையில் புத்தர் சிலை சேதப்படுத்திய சம்பவமும் 2018 இலே இடம்பெறுகின்றது.

மேலும் சஹ்ரானின் நடவடிக்கையின் மோசமான நிலையை உணர்ந்து கொண்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க சில்வா அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்தபோது, நாமல் குமார என்ற ஒருவர் திடீரென ஊடகங்களுக்கு முன் வந்து மைத்திரிபால சிறிசேன மற்றும் கோத்தாபய ராஜபக்ஷ் ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் இடம்பெறுகின்றதென்ற நாடகத்தை மேற்கொண்டார். அதனால் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க சில்வா கைது செய்யப்பட்டு இன்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இதுவெல்லாம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாகும்.

அத்துடன் மதங்களுக்கிடையில் பிரச்சினையும் முரண்பாடுகளும் ஏற்படுவதற்கு அரசியல்வாதிகளே காரணமாகும். இதற்கு சிறந்த உதாரணம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. அவர் 2019 தேர்தலில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயற்பட்டே வெற்றி பெற்றார். அதேபோன்றே 2019 ஏப்ரல் மாதம் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கோத்தாபய ராஜபக்ஷ் தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் என்ற அறிவிப்பை விடுத்தார். அதனால் இதுவெல்லாம் சும்மா இடம்பெற்றதல்ல. திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டவையாகும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad