நுண் கடன் திட்டத்தால் பாதிக்கப்பட்டு இதுவரை 200 க்கும் மேற்பட்ட பெண்கள் தற்கொலை - பேராசிரியர் ஹரினி பாலசூரிய - News View

Breaking

Post Top Ad

Tuesday, March 9, 2021

நுண் கடன் திட்டத்தால் பாதிக்கப்பட்டு இதுவரை 200 க்கும் மேற்பட்ட பெண்கள் தற்கொலை - பேராசிரியர் ஹரினி பாலசூரிய

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

நுண் கடன் திட்டத்தால் பாதிக்கப்பட்டு இதுவரை 200 க்கும் மேற்பட்ட பெண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 2.8 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஹரினி பாலசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதார முறையால் பெண் தொழில் முயற்சியாளர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பாரியளவில் நிதி நிறுவனங்களால் பெண்கள் பாரியளவில் சூரையாடப்பட்டு வருகின்றனர். குறிப்பாக நுண் கடன் நிதி நிறுவனங்களின் போலி வாக்குறுதிகளுக்கு ஏமாற்றப்பட்டு, பெற்றுக் கொண்ட கடனை செலுத்த முடியாத பலர் எமது நாட்டில் இருக்கின்றனர்.

மேலும் நுண் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களின் பாரிய சூரையாடல்கள் காரணமாக எமது நாட்டில் 2.8 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 24 இலட்சத்தி 38 ஆயிரம் பேர் பெண்களாகும். அதேபோன்று 200 பெண்கள் வரை நுண் கடன் திட்டத்தில் சிக்கிக் காெண்டு கடனை செலுத்த முடியாமல் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

மேலும் நுண் கடன் நிதி நிறுவனங்கள் மிகவும் மோசமான முறையில் பெண்களை இலக்குவைத்து இந்த கடன் திட்டத்தை மேற்கொண்டு வருகின்றன. இலாபத்தைவிடவும் பாரிய சூரையாடலையே மேற்கொள்கின்றன. அதனால் நுண் கடன் நிதி நிறுவனங்களின் செயற்பாடுகள், அவற்றின் சட்ட முறைகள் தொடர்பாக கணக்காய்வொன்றை மேற்கொள்ள வேண்டும். 

இது தொடர்பாக பாராளுமன்ற செயற்குழுவில் ஆராய்ந்து முறையான செயற்திட்டங்களை ஏற்படுத்த வேண்டும். அதேபோன்று நுண் கடன் திட்டத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கு கடன் நிவாரணங்களை வழங்குவதாக பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவிக்கப்பட்டபோதும் அந்த நிவாரணங்கள் இதுவரை அந்த பெண்களுக்கு கிடைக்கவில்லை என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad