பாடல், கவிதைகளில் மாத்திரம் பெண்களை போற்றி புகழ்ந்தாலும், இழிவான நிலையில் நடத்தும் சமூகமே காணப்படுகின்றது - பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதங்கம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 9, 2021

பாடல், கவிதைகளில் மாத்திரம் பெண்களை போற்றி புகழ்ந்தாலும், இழிவான நிலையில் நடத்தும் சமூகமே காணப்படுகின்றது - பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதங்கம்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

பாடல்களிலும், கவிதைகளில் மாத்திரம் பெண்களை போற்றி புகழ்ந்து பாடினாலும் சமூகத்தில் பெண்களை இழிவான நிலையில் நடத்தும் சமூகமே காணப்படுகின்றது. தலைமை பொறுப்புகளை வழங்கும் வேளையில் பாலினம் குறித்து கவனம் செலுத்துவது வெட்கப்பட வேண்டிய ஒன்றாகும் என பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும், எதிர்க்கட்சி பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் தமது வேதனையை வெளிப்படுத்தினர்.

ஊடகங்களே இன்று பெண்களை மிக இழிவாக நடத்துவதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தினர்.

ஆண் - பெண் சமநிலை தொடர்பிலான பாராளுமன்ற பெண்கள் தெரிவுக்குழு அமைப்பது குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர் ரோஹினி குமாரி விஜயரத்ன கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு பிரேரணையில் உரையாற்றும் போதே இந்த கருத்துக்களை இவர்கள் முன்வைத்தனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர் ரோஹினி குமாரி விஜயரத்ன இதன்போது கருத்து தெரிவிக்கையில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், அவதூறு செயற்பாடுகள் நாட்டில் அதிகரித்துள்ளன. நாட்டின் கல்வித் துறையில் பெண்களின் மட்டம் உயர்வாக இருந்தாலும் கூட உயரிய பணிகளின் அவர்களை நியமிக்க தயக்கம் காட்டுகின்றனர். காரணம் என்னவெனின் அவர்களுக்கு மகப்பேற்று விடுமுறை வழங்க வேண்டும் என்ற பிரதாக காரணமாகும். 

ஆனால் கூலி வேளைகளில் பெண்களை இணைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறைந்த கொடுப்பனவில் அதிக பணிகளை பெற்றுக் கொள்ள முடியும் என்பதே இதன் நோக்கமாகும். 

பாடல்களில் கவிதைகளின் பெண்களை போற்றி புகழ்ந்து பாடினாலும் உண்மையில் பெண்களை இழிவான நிலையில் நடத்தும் சூழலே காணப்படுகின்றது.

தலைமை பொறுப்புகளை வழங்கும் வேளையில் பாலினம் குறித்து கவனம் செலுத்துவது வெட்கப்பட வேண்டியுள்ளது. சகல துறைகளிலும் பெண்களை நிராகரிக்கும் மனநிலை உருவாகியுள்ளது என்றார்.

விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி உறுப்பினர் தலதா அத்துகோரள கூறுகையில், மார்ச் 8 ஆம் திகதி மட்டுப்படுத்தப்பட்ட பெண்கள் தினத்தை கொண்டாடுகின்றனர்.

அன்றைய தினத்தில் மட்டும் பெண்கள் உரிமை, சுதந்தரம் பற்றி பேசி விட்டு ஒரு நிகழ்ச்சியாக அடையாளப்படுத்துகின்றனர். பெண்கள் தினத்தில் மட்டும் பெண்கள் பெருமையை பேசுவார்கள். நாமே உலகிற்கு முதல் பெண் பிரதமரை உருவாக்கினோம், ஜனாதிபதியை உருவாக்கினோம் என புகழ் பாடுவார்கள். ஆனால் ஏனைய தினங்களில் பெண்களே அதிகமாக ஒடுக்கப்படுகின்றனர். 

இந்த நாட்டின் பொருளாதரத்தில் பெண்களே பாரிய பங்களிப்பை செய்கின்றனர். வெளிநாடுகளில் பணிபுரியும் பெண்கள், தோட்டத் தொழிலாளர்கள் எவரையும் நாம் முறையாக பாதுகாக்கவில்லை.

அதுமட்டுமல்ல ஊடகம் மிக மோசமாக பெண்களை அவமதித்து வருகின்றது. மிகக் கீழ்த்தரமாக பெண்களை விமர்சிக்கும் நடவடிக்கைகளை ஊடகங்கள் முன்னெடுக்கின்றன. தலை கிடைத்து விட்டதா என்பதே இன்று நாட்டில் பிரதான கதையாக உள்ளது.

நாட்டில் உள்ள பிரதான பிரச்சினை ஒரு பெண்ணின் தலையா என்ற கேள்வி எழுகின்றது. நாட்டுக்காக தியாகம் செய்யும் தோட்டத் தொழிலாளர் பெண்கள், வெளிநாடுகளில் பனிபுரியும் பெண்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே விவாதத்தில் உரையாற்கையில், இந்த நாட்டில் வரலாறு முழுவதும் போராடியே பெண்களின் உரிமைகளை பெற்றுக் கொள்ள நேர்ந்துள்ளது. நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து இன்றுவரை 5 வீதமான பெண் பிரதிநிதித்துவமே பாராளுமன்றத்தில் உள்ளது.

பெண்களின் குரலை மட்டுப்படுத்தும் செயற்பாடுகளையே சகல அரசாங்கமும் முன்னெடுத்துள்ளனர். அதுமட்டுமல்ல 90 வீதமான பெண்கள் பொது போக்குவரத்தில் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆய்வொன்றில் கூறப்பட்டுள்ளது. பெண்கள் குறித்த சிந்தனையில் நாம் இன்னமும் கற்காலத்தில் உள்ளோம் என்றே கூற வேண்டும்.

பெண்களின் தகுதி, தலைமைத்துவம் மழுங்கடிக்கப்படும் நிலைமையே இன்றும் காணப்படுகின்றது. பெண்களை இன்று பாலியல் பொருட்களாக பாவிக்கும் நிலைமைகளே காணப்படுகின்றது.

ஊடகங்கள் பெண்களை மோசமான நிலைக்கு தள்ளியுள்ளனர். சமூக ஊடகங்களும் அவ்வாறான செயற்பாடுகளே காணப்படுகின்றது. இவற்றில் இருந்து விடுபடும் நிலைமை உருவாக வேண்டும். பெண்கள் என்பதற்காக சகல பொறுப்புகளில் இருந்து நிராகரிக்கப்படும் மனநிலையில் இருந்து சமூகம் மாற வேண்டும் என்றார்.

பெண்கள் உரிமைகள், பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடி தீர்வுகளை பெற்றுக் கொடுக்க பெண்கள் தெரிவுக்குழு ஒன்றினை உருவாகிக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்தோம். அதற்கான வாய்ப்பொன்று உருவாகியுள்ளது. 

கீழ் மட்டத்திலான தொழில் துறையில் மாத்திரம் பெண்களை பயன்படுத்திக் கொண்டு பெண்களின் வளர்ச்சியில் தடைகளாக இருக்கும் நிலைமை மாற வேண்டும். சம உரிமைகளை கேட்டு நாம் போராடும் நிலைமையை உருவாக்காது பெண்களின் முக்கியத்துவம், அவசியத்தை உணர்ந்து சமூகம் பெண்களுக்கு இடமளிக்க வேண்டும்.

பெண்களின் பாதுகாப்பை இந்த சமூகமே கையில் எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்களான சீதா அரம்பேபோல, ஹரிணி அமரசூரிய ஆகியோரும் சபையில் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment