கொழும்பு - கிரேண்ட்பாஸ் பகுதியில் போதைப் பொருள் விவகாரத்தால் 19 வயது இளைஞன் பலி - News View

Breaking

Post Top Ad

Friday, March 19, 2021

கொழும்பு - கிரேண்ட்பாஸ் பகுதியில் போதைப் பொருள் விவகாரத்தால் 19 வயது இளைஞன் பலி

(செ.தேன்மொழி)

கொழும்பு - கிரேண்ட்பாஸ் பகுதியில் போதைப் பொருள் விவகாரம் தொடர்பில் இருவருக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக, கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவலோக்க விளையாட்டு மைதானத்திற்கு அருகில் நேற்று முன்தினம் பிற்பகல் ஒரு மணியளவில், ஐஸ் போதைப் பொருளை விலைக்கு பெற்றுக் கொள்வது தொடர்பில் உயிரிழந்த இளைஞனுக்கும், சந்தேக நபருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டிருந்த இருவருக்குமிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. பின்னர் சந்தேக நபர் உயிரிழந்த இளைஞனின் கழுத்து பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதுடன், படுகாயமடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

சேதவத்த - வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கிரேண்ட்பாஸ் பொலிஸார் மேற்படி பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேக நபரை கைது செய்துள்ளனர். 

மோதலின் போது சந்தேக நபரும் காயமடைந்துள்ளதுடன், அவர் தற்போது பொலிஸாரின் பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad