கொவிட் தொற்று அனர்த்த காலப்பகுதியில், அரச வைத்தியசாலைகளில் தொற்றா நோயாளர்களுக்காக வழங்கப்பட்ட சுமார் 17 லட்சம் மருந்துப் பொதிகளை அந்த நோயாளிகளின் வீடுகளிலேயே விநியோகிக்க தபால் திணைக்களத்தினால் முடிந்துள்ளது.
வெகுஜன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் தலைமையில் தபால் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.
கொவிட் அனர்த்த காலத்தில் மக்கள் வைத்தியசாலைகளுக்குச் சென்று மருந்து வகைககளை பெற்றுக் கொள்வதில் சிரமங்கள் காணப்பட்டன. இதையடுத்து தபால் திணைக்களத்தின் மூலம் இந்த மருந்துப் பொதிகளை நோயாளர்களுக்கு விநியோகிக்கும் திட்டம் ஆரம்பமானது.
மேலும் நேற்று வரையிலும் 17 லட்சம் மருந்து பொதிகளை விநியோகிக்க முடிந்ததாக தபால்மா அதிபர் ரோஹன ஆரியரத்ன இதன்போது தெரிவித்தார்.
கடந்த காலங்களில் கொவிட் ஆபத்து நிலையையும் பொருட்படுத்தாது தபால் ஊழியர்கள் மேற்கொண்ட சேவையை பாராட்டுவதாக அமைச்சர் இங்கு தெரிவித்தார்.
அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து கொவிட் தடுப்பூசியை வழங்குமாறு தான் சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
தபால் சேவையின் தீர்க்கப்படாத பிரச்சினைகளை முறையான பொறிமுறையின் மூலம் தீர்ப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும், எவருக்கும் பாரபட்சமின்றி சம்பள முரண்பாடுகள் மற்றும் ஆட்சேர்ப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து உரிய கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment