கொல்கத்தாவில் 13 மாடிகளைக் கொண்ட ரயில்வே அலுவலக கட்டிடத்தில் தீ விபத்து : 9 பேர் பலி - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 9, 2021

கொல்கத்தாவில் 13 மாடிகளைக் கொண்ட ரயில்வே அலுவலக கட்டிடத்தில் தீ விபத்து : 9 பேர் பலி

கொல்கத்தாவில் அடுக்குமாடிக் கட்டிடமொன்றில் திங்கட்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நான்கு தீயணைப்பு வீரர்கள், இரண்டு ரயில்வே ஊழியர்களும் மற்றும் ஒரு கொல்கத்தா பொலிஸ் அதிகாரி ஆகியோரும் உயிரிழந்தவர்களில் அடங்குவதாக மேற்கு வங்க தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் அமைச்சர் சுஜித் போஸ் உறுதிப்படுத்தினார்.

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஸ்ட்ராண்ட் வீதியில் அமைந்துள்ள 13 மாடிகளைக் கொண்ட கிழக்கு ரயில்வே அலுவலக கட்டிடத்திலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டது.

விபத்து குறித்து ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில், "கொல்கத்தா ரயில் விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். ரயில்வே ஊழியர்கள், பொது மேலாளர் சம்பவ இடத்தில் உள்ளனர். மாநில அரசுடன் மீட்பு, நிவாரணப் பணியில் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம். ரயில்வே வாரியத்தின் 4 முக்கிய தலைமை அதிகாரிகள் அடங்கிய குழு சார்பில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" எனப் பதிவிட்டிருந்தார்.

இதற்கிடையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திங்கட்கிழமை இரவு குறித்த இடத்தை அடைந்து மீட்பு முயற்சிகளை மேற்பார்வையிட்டதுடன், இந்த விபத்து மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபா ஒதுக்கப்படும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றார்.

அதேநேரம் பிரதமர் நரேந்திர மோடி இறந்தவர்களின் உறவினர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்ததோடு, காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாவும், காயமடைந்தோருக்கு 50,000 ரூபா நிவாரணத் தொகையும் வழங்க உத்தரவிட்டார்.

தீ விபத்து காரணமாக ரயில்வேயின் புதிய கொயிலகாட் கட்டிடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கிழக்கு இந்தியாவில் ரயில் பயணத்திற்காக கணினிமயமாக்கப்பட்ட டிக்கெட் முன்பதிவு தடைா்பட்டுள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நேற்று திங்கட்கிழமை மாலை 6.10 மணியளவில் கொல்கத்தா காவல்துறையினர் முதலில் தீ விபத்து குறித்து எச்சரிக்கப்பட்டனர்.

குறைந்தது 10 தீயணைப்பு இயந்திரங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதற்கான பணிகள் இன்னும் நடைபெற்று வருவதாக தீயணைப்பு படையின் அதிகாரி ஒருவர் உறுதிபடுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment