கம்பஹா விக்ரமாரச்சி சுதேச மருத்துவக் கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்றும் அங்குரார்ப்பண விழா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (04) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
ஆயுர்வேத விஞ்ஞானத்தைப் பயிலும் மாணவர்களுக்கு ஆயுர்வேத முறைகளை கோட்பாடு மற்றும் நடைமுறை ரீதியாக கற்பிக்கும் நோக்குடன் ஆயுர்வேத சக்கரவர்த்தி பண்டிதர் ஜி.பி. விக்ரமாரச்சினால் கம்பஹா சித்தாயுர்வேத கல்லூரி 1929 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. முதல் மாணவர் குழுவில் 20 மாணவர்கள் இருந்தனர்.
விக்ரமாரச்சி மருத்துவக் கல்லூரி 1995 ஆம் ஆண்டு களணி பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஒரு பல்கலைக்கழக நிறுவனம் என்ற நிலைக்கு தரமுயர்த்தப்பட்டது.
தெற்காசிய பிராந்தியத்தில் சுதேச மருத்துவக் கல்வி மத்திய நிலையமாக மேம்படுத்தும் நோக்கத்துடன் 2021 மார்ச் 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் “கம்பஹா விக்ரமாரச்சி சுதேச மருத்துவ பல்கலைக்கழகம், இலங்கை” என்ற பெயரின் கீழ் தாபிக்கப்பட்டுள்ளது.
இது இலங்கையின் 16 வது பல்கலைக்கழகமாகும். இதில் சேர்க்கப்பட்டுள்ள புதிய பட்டப்படிப்புகளின் எண்ணிக்கை 07 ஆகும். ஒரு குழுவில் 50 மாணவர்கள் என்ற வகையில் 2021 ஆம் ஆண்டில் 350 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்படும்.
ஜனாதிபதி பல்கலைக்கழக இணையத்தளத்தை செயற்படுத்தி பல்கலைக்கழக அதிதிகள் புத்தகத்தில் கையெழுத்திட்டார். உத்தியோகபூர்வ இலட்சினை, கொடி மற்றும் கீதமும் வெளியிடப்பட்டன.
ஜனாதிபதி பல்கலைக்கழகத்தின் முதல் வேந்தர் மல்வத்தை பீடத்தின் அனுநாயக்க தேரர் கலாநிதி சங்கைக்குரிய நியங்கொட விஜிதசிறி நாயக்க தேரரிடம் அதற்கான ஆவணத்தை கையளித்தார்.
பல்கலைக்கழக பணிக்குழாமுடன் ஜனாதிபதியுடன் குழு புகைப்படத்திற்கும் தோற்றினார். பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் ஜனிதா ஏ. லியனகே ஜனாதிபதிக்கும் பிரதமர் மற்றும் கல்வி அமைச்சருக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கினார்.
மகா சங்கத்தினர், ஏனைய சமயத் தலைவர்கள், அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், அமைச்சர் சரத் வீரசேக்கர, இராஜாங்க அமைச்சர்களான சீதா அரம்பேபொல, லசந்த அலகியவண்ண, சிசிர ஜயகொடி, பாதுகாப்புப் பணிக்குழாம் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, பல்கலைக்கழக வேந்தர்கள், உபவேந்தர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment