Full Face தலைக் கவசம் அணிவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் - பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளதாக சட்டமா அதிபர் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 16, 2021

Full Face தலைக் கவசம் அணிவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் - பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளதாக சட்டமா அதிபர் தெரிவிப்பு

முழு முகம் மறையும் வகையிலான தலைக் கவசங்களை (Full Face Helmet) அணிந்து பயணிக்கும் மோட்டார் சைக்கிள் சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாமென, பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளதாக, சட்டமா அதிபர் இன்று (16) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

வெல்லவாய பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவொன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பாரிந்த ரணசிங்க இதனை மன்றிற்கு அறிவித்தார்.

குறித்த மனு இன்று (16) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக கணேபோல ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மனுதாரர் தனது மனுவில், பொலிஸார் தன் மீது சட்டத்திற்கு முரணான வகையில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

முழு முகத்தையும் மூடும் வகையிலான பாதுகாப்பான தலைக் கவசம் அணிந்து பயணித்ததாகத் தெரிவித்து, வெல்லவாய பொலிஸார் தன் மீது நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளதாகவும், 2017 ஆம் ஆண்டின் மோட்டார் சைக்கிள் பாதுகாப்பு தலைக் கவசம் தொடர்பான சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இவ்விதிமுறைகள் பாராளுமன்றத்தால் முறையாக அங்கீகரிக்கப்படவில்லை என்றும் அது சட்டத்திற்கு முரணானது என்றும் மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் மனுதாரர் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கை மீளப் பெறுமாறு, பொலிஸாருக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பாரிந்த ரணசிங்க மன்றில் தெரிவித்தார்.

No comments:

Post a Comment