இலங்கைத் தமிழர் விடயத்தில் சர்வதேசம் மீண்டும் தோல்வியடையக் கூடாது - வலியுறுத்தியது மனித உரிமைகள் கண்காணிப்பகம்! - News View

About Us

About Us

Breaking

Saturday, February 27, 2021

இலங்கைத் தமிழர் விடயத்தில் சர்வதேசம் மீண்டும் தோல்வியடையக் கூடாது - வலியுறுத்தியது மனித உரிமைகள் கண்காணிப்பகம்!

இலங்கைத் தமிழர் விடயத்தில் சர்வதேசமானது முன்னர் தோல்வி அடைந்ததைப் போல மீண்டும் தோல்வியடைந்து விடக்கூடாது என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது மாநாட்டில் தமது நிலைப்பாட்டை வெளியிட்ட மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பிரதிநிதி இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “யுத்தம் நிறைவடைந்து 11 ஆண்டுகள் கடந்துவிட்டன. யுத்தத்தில் ஈடுபட்டிருந்த இரண்டு தரப்பினரும் மேற்கொண்ட யுத்தக் குற்றங்களுக்கு இன்னும் பொறுப்புக் கூறப்படவில்லை.

ஏறக்குறைய ஒரு தசாப்த காலமாக ஐ.நா. சபை இலங்கை விடயத்தைக் கையாண்டு வருகிறது. எனினும் இலங்கை அரசாங்கம், தம்மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக மறுதலித்து வருகிறது.

கடந்த ஆண்டு, இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்ற உடனேயே, இலங்கை அரசாங்கம் ஐ.நா.வுக்கு வழங்கிய உறுதிமொழிகளைக் கைவிட்டது.

அத்துடன், போர்க் குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்களை அதிகாரப் பதவிகளுக்கு நியமிக்கிறது. பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதற்காக இலங்கையின் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒரே சில வீரர்களில் ஒருவருக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இதனைவிட, ஒரு சாத்தியமான உள்நாட்டுச் செயன்முறை இருப்பதாக, ஐ.நா. சபையைத் தவறாக வழிநடத்தும் ஒரு வெளிப்படையான முயற்சியில் இலங்கை மற்றொரு விசாரணை ஆணையகத்தை அறிவித்துள்ளது.

சர்வதேச அழுத்தத்தைத் திசைதிருப்ப நிறுவப்பட்ட இந்த விசாரணை ஆணையகம், பலவீனமான ஆணைகள், சுதந்திரம் இல்லாமை, வளங்களின் பற்றாக்குறை, நடைமுறையற்ற நிலை, மோசமான ஒத்துழைப்பு ஆகியவற்றால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையகங்களின் நீண்ட வரலாற்றுத் தொடர்ச்சியாகும்.

இதேவேளை, இந்தவாரம் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் உரையாற்றியிருந்தார். அவர் சர்வதேச போர்க் குற்றங்களை மறுத்தார். ஐ.நா.வின் தீர்மானங்களை நிராகரித்ததுடன் உயர்ஸ்தானிகரின் அறிக்கையை பிரசாரம் எனத் தெரிவித்து நிராகரித்தார்.

இந்நிலையில், நீதியைப் பின்தொடர்வதற்கான எந்த நோக்கமும் அரசாங்கத்திற்கு இருப்பதாக யாரும் நம்ப முடியாது.

அத்துடன், இப்போதும் இலங்கையில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்ட மக்கள், நீதி கோரிய இலங்கை அதிகாரிகள்கூட ஆபத்தில் உள்ளனர். வழக்கறிஞர்கள் தன்னிச்சையாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஐ.நா.சபையின் நடவடிக்கையை வலியுறுத்திய போராட்டக்காரர்கள் பொலிஸாரால் அழைக்கப்பட்டுள்ளனர்.

எனவே, கடுமையான குற்றங்களுக்கான சர்வதேச பொறுப்புணர்வை முன்னெடுப்பதற்காகவும் மீண்டும் நிகழாமையை உறுதிப்படுத்துவதற்காகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் பரிந்துரைகளை பேரவையின் உறுப்பு நாடுகள் செயற்படுத்த வேண்டும்.

உயர்ஸ்தானிகர் கூறுவது போல், சர்வதேச சமூகம் கடந்த காலத்தில் தமிழ் மக்கள் விடயத்தில் தோல்வியுற்றது போல், மீண்டும் ஏற்படக் கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment