'லம்பி' எனும் தோல் நோயால் பல பகுதிகளில் மாடுகள் இறப்பு - கால்நடைகளுக்கு மேய்ச்சல் தரை இன்மையால் பண்ணையாளர்கள் கவலை - News View

About Us

About Us

Breaking

Friday, February 5, 2021

'லம்பி' எனும் தோல் நோயால் பல பகுதிகளில் மாடுகள் இறப்பு - கால்நடைகளுக்கு மேய்ச்சல் தரை இன்மையால் பண்ணையாளர்கள் கவலை

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை, கிரான், ஓட்டமாவடி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவில், மேய்ச்சல் தரை இன்மை காரணமாக தங்களது கால்நடைகள் உணவின்மையால் உயிரிழப்பதாக கால்நடை பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய உள்ளுர் பால் உற்பத்தியை அபிவிருத்தி செய்யும் நோக்கில் கால்நடை பண்ணையாளர்களுக்கு தொழிலை அபிவிருத்தி செய்யும் நோக்கில் முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையிலும் வாகரை, கிரான், ஓட்டமாவடி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பண்ணையாளர்கள் மேயச்சல் தரை இன்மையால் தங்களது கால்நடைகளை வளர்ப்பதில் பாரிய சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் யுத்தம் முடிவுற்று நாட்டில் ஏற்பட்ட சமாதான சூழ்நிலையை தொடர்ந்து நாங்கள் யுத்த காலத்தில் குடியிருந்த பகுதிகளுக்கு மீண்டும் மீள்குடியேறி எங்களது கால்நடைகள் மற்றும் விவசாயத்தினை மேற்கொண்டு வருகின்றோம்.

நாங்கள் கால்நடைகளை வளர்த்து வரும் நிலையில் வன இலாகா அதிகாரிகள் வருகை தந்து எங்களது காணிக்குள் எல்லைக் கல்லை இட்டு இது வன இலாகாவிற்கு உரிய காணி என்று கூறுகின்றனர். இதனால் எங்களது கால்நடைகளை வளர்ப்பதிலும், கால்நடைகளுக்கு உணவு வழங்குவதிலும் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றோம்.

எங்களுக்கு மேயச்சல் தரைக்குரிய காணிகளை அமைத்து கால்நடைகளை வளர்ப்பதற்கு வன இலாகா திணைக்களத்திடம் இருந்து அனுமதியை பெற்றுக் கொள்ள முடியாமல் உள்ளது. எங்களுக்கு மேய்ச்சல் தரை இன்மை காரணமாக நாளுக்கு நாள் எங்களது கால்நடைகள் உயிரிழந்து கொண்டு வருகின்றது. நாங்கள் கால்நடை மற்றும் விவசாயத்தினையே தங்களது ஜீவனோபாய தொழிலாக நம்பி வாழ்ந்து வருகின்றோம் என கால்நடை பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

நாங்கள் பல இன்னல்களை அனுபவித்து கால்நடைகளை வளர்த்து வருகின்றோம். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தின் மூலமே எங்களது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கை மற்றும் பிள்ளைகளின் வாழ்க்கை நடவடிக்கைகளை நம்பி உள்ளோம். ஆனால் தொடர்ச்சியாக எங்களது கால்நடைகள் உயிரிழந்து வருவதால் நாங்கள் பாரிய கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றோம்.

அத்தோடு தற்போது மாடுகளுக்கு ´லம்பி´ எனும் தோல் நோய் தொற்று பரவல் ஏற்பட்ட நிலையில் பல்வேறு பகுதிகளில் மாடுகள் உயிரிழந்து காணப்படுகின்றது. இந்த நோய்கள் கூட எங்கள் பகுதி கால்நடைகளுக்கும் எற்படக்கூடிய வாய்ப்புக்கள் உண்டாகுமா என்ற பயத்துடன் பண்ணையாளர்கள் காணப்படுகின்றனர்.

எனவே, மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை, கிரான், ஓட்டமாவடி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவில் மேய்ச்சல் தரை இன்மை காரணமாக பாதிக்கப்படும் கால்நடை பண்ணையாளர்களின் நலன்கருதி மேய்ச்சல் தரை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், கால்நடை பண்ணையாளர்களிடம் உள்ள காணியில் கால்நடைகளுக்கு பண்ணை அமைத்து வளர்ப்பதற்கும் அனுமதி வழங்க முன்வர வேண்டும்.

அத்தோடு தொடர்ச்சியாக கால்நடைகள் உயிரிழந்து வரும் நிலையில் இவற்றினால் நாம் பாரிய கஸ்டத்தினை அனுபவித்து வரும் நிலையில் தங்களுக்கு உரிய நஷ்ட ஈட்டினை வழங்கவும், வன இலாகா திணைக்களத்தினர் எங்களுக்கு பண்ணை அமைத்து கால்நடைகளை வளர்க்க அனுமதி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே, மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை, கிரான், ஓட்டமாவடி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவில் காணப்படும் கால்நடைகளை எவ்வித இடையூறுகளும் இன்றி வளர்ப்பதற்கு அரசியல்வாதிகள் மற்றும் உரிய அரச அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்தி மிக விரைவில் நிரந்தர தீர்வினை பெற்றுத் தருமாறு கால்நடை பண்ணையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கால்நடை பண்ணையாளர்களுக்கு முன்னுரிமை வழங்குவதாக கூறப்பட்ட கருத்தினை அரச அதிகாரிகள் செயற்படுத்த முன்வருவார்களாக என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் என எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மட்டக்களப்பு நிருபர் குகதர்ஷன்

No comments:

Post a Comment