அங்கொட லொக்காவின் மரணத்தை உறுதி செய்ய இலங்கையிடம் உதவி கோரும் இந்தியா - News View

Breaking

Post Top Ad

Friday, February 5, 2021

அங்கொட லொக்காவின் மரணத்தை உறுதி செய்ய இலங்கையிடம் உதவி கோரும் இந்தியா

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவின் தலைவரான ‘அங்கொட லொக்கா’ தொடர்பில் மரபணு பரிசோதனை நடத்துவதற்கு இந்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழகத்தின் கோயம்புத்தூரில் உயிரிழந்த நபர், பிரதீப் சிங் என்ற பெயரில் வசித்த அங்கொட லொக்கா என்பதை உறுதிப்படுத்துவதற்காக மரபணு பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு, களுத்துறை பகுதியில் வைத்து சிறைச்சாலை பஸ் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தில் அங்கொட லொக்கா தேடப்பட்டு வந்தார். இந்த தாக்குதலில் சிறைச்சாலை அதிகாரிகள், சந்தேகநபர்கள் உள்ளிட்டோர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலை வழிநடத்தியிருந்த அங்கொட லொக்கா என அழைக்கப்படும் மத்தும லசந்த சந்தன பெரேரா நாட்டிலிருந்து தப்பிச் சென்றார். படகு மூலம் அவர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் உயிரிழந்ததாக பொலிஸாருக்கு அறியக்கிடைத்தது.

இந்தியாவின் கோயம்புத்தூரில் அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வௌியாகின. இந்த மரணம் தொடர்பில் இந்தியாவின் தேசிய புலனாய்வுப் பிரிவினரால் உறுதிப்படுத்தப்பட்டு இலங்கைக்கு அறிவிக்கப்பட்டது.

எனினும், மரபணு பரிசோதனையின் மூலம் அதனை உறுதிப்படுத்துவதற்காக, அங்கொட லொக்காவின் நெருங்கிய உறவினர் ஒருவரின் மரபணு பரிசோதனை அறிக்கையை இந்தியாவிற்கு அனுப்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை முன்னெடுத்து, மரபணு பரிசோதனை அறிக்கையை இந்தியாவிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அஜித் ரோஹன கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad