கோத்தாபய அரசாங்கத்தின் ஜெனிவாவுக்கான பதிலளிப்பானது மஹிந்தவின் எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முற்றாக முரணானது - கலாநிதி தயான் ஜயதிலக - News View

About Us

About Us

Breaking

Sunday, February 28, 2021

கோத்தாபய அரசாங்கத்தின் ஜெனிவாவுக்கான பதிலளிப்பானது மஹிந்தவின் எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முற்றாக முரணானது - கலாநிதி தயான் ஜயதிலக

(ஆர்.ராம்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை பற்றிய மீளாய்வு அறிக்கைக்கு கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அளித்துள்ள 30 பக்க பதிலளிப்பானது அவருடைய சகோதரரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (எல்.எல்.ஆர்.சி) பரிந்துரைகளுக்கு முற்றாக முரணானது என்று ஐ.நாவுக்கான முன்னாள் வதிவிடப் பிரதிநிதியும், இராஜதந்திரியும், ஐக்கிய மக்கள் சக்தியின் சர்வதேச உறவுகளுக்கான சிரேஷ்ட ஆலோசகருமான கலாநிதி தயான் ஜயதிலக சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இலங்கையின் பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் அம்மையாரின் மீளாய்வு அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதனை முழுமையாக நிராகரிப்பதாக கூறி இலங்கை அரசாங்கம் 30 பக்கங்களினான அறிக்கையொன்றில் எழுத்து மூலமாக பதிலளித்துள்ளது.

இந்நிலையில் அது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே கலாநிதி தயான் ஜயத்திலக மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் இந்த விடயம் சம்பந்தமாக மேலும் தெரிவிக்கையில், 26 வருட கால ஆயுத முரண்பாடுகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்காகவும் சில சம்பவங்கள் தொடர்பில் வெளிப்படைத் தன்மையுடன் பொறுப்புக் கூறுவதற்காகவும் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியாக பதவி வகித்தபோது கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை முன்னாள் சட்டமா அதிபர் சி.ஆர்.டி.சில்வா தலைமையில் 2010 ஆண்டு நியமித்திருந்தார்.

இந்த குழுவானது பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுருத்தியிருந்த நிலையில் 2011ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் திகதி தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை ஜனாதிபதியிடத்தில் சமர்பித்திருந்தது. அந்த அறிக்கை அதே ஆண்டு டிசம்பர் 16ஆம் திகதி பகிரங்கப்படுத்தப்பட்டது. 

இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை படிப்படியாக முன்னெடுப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ விரும்பியிருந்தபோதும், அவரைச் சூழ இருந்தவர்கள் அதற்கு இடமளித்திருக்கவில்லை.

அந்த பரிந்துரைகளை படிப்படியாக நடைமுறைப்படுத்துவதன் ஊடாக தேவையற்ற சர்வதேச தரப்புக்களின் விமர்சனங்களுக்கு உள்ளாக வேண்டிய நிலைமைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அற்றுப்போயிருக்கும் என்ற விடயத்தினை நான் ஜெனிவாவிலிருந்து திரும்பியதும் மஹிந்த ராஜபக்ஷ விடத்தில் கூறியிருந்தேன்.

துரதிஷ்டவசமாக அந்த விடயங்கள் எவையும் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை. இதன் காரணமாகவே தற்போது மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் காட்டமான அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கின்றார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இந்நிலையில் அவருடைய இலங்கை பற்றி மீளாய்வு அறிக்கையை நிராகரிப்பதாக அரசாங்கம் குறிப்பிட்டு 30 பக்கத்தில் எழுத்து மூலமான பதிலை அளித்துள்ளது. இதுவொரு தவாறான அணுகுமுறையாகும்.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் போரில் ஈடுபட்ட இரு தரப்பினரினதும் குற்றங்கள் தொடர்பிலாக கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி பல்வேறு விடயங்களுக்கு உள்நாட்டிலேயே தீர்வுகளை எட்டக்கூடிய வகையிலான பரிந்துரைகளும் காணப்படுகின்றன. 

இந்நிலையில் அவ்விதமான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை நடைமுறைப்படுத்துவது என்ற கருத்தினை சர்வதேசத்திற்கு முன்வைப்பதன் மூலம் பல்வேறு நெருக்கடிகளைத் தவிர்த்திருக்க முடியும். ஆனால் ஆட்சியாளர்கள் அதனைச் செய்யவில்லை.

தற்போது, கோட்டாபய அரசாங்கம் அந்த பரிந்துரைகளை முழுமையாக மறுதலிக்கும் வகையில் ஐ.நா. உயர்ஸ்தானிகருக்கான தமது பதலளிப்பைச் செய்திருகின்றது. இதன் மூலம் மஹிந்தவினால் உருவாக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்ட ஆணைக்குழுவின் பரிந்துரைகள் முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளது.

கோட்டாபய அரசாங்கமானது மீள நிகழாமையை உறுதிப்படுத்துவதற்கு முனையவில்லை. அவ்வாறு முனைந்திருந்தால் கற்றுக் கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை புறமொதுக்கியிருக்காது. இப்போது அனைத்து வாயில்களையும் அதுவே மூடிவிட்டது என்றார்.

No comments:

Post a Comment