ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவில் சத்தியாக்கிரகப் போராட்டம்! - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 9, 2021

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவில் சத்தியாக்கிரகப் போராட்டம்!

வவுனியா பூந்தோட்டம் சிறிநகர் கிராம மக்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சத்தியாக்கிரக போராட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஈடுபட்டுள்ளனர்.

20 வருடங்களாகியும் தமது கிராமத்திற்கு காணி உரிமைப்பத்திரங்கள் வழங்கப்படவில்லை, உட்கட்டுமான வசதிகள் செய்துதரப்படவில்லை. மைதானம் இன்மை, வீட்டுத்திட்டம் வழங்காமை போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல வருடங்களாகியும் தமது கோரிக்கைகளிற்கு தீர்வு கிடைக்கவில்லை. இது தொடர்பாக ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர், அரச அதிகாரிகளிற்கு தெரியப்படுத்தியும் எமது விடயத்தில் எவரும் கரிசனை கொள்ளவில்லை என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

உட்கட்டுமானம் சீரின்மையால் மழைக்காலங்களில் வீடுகளில் நீர்தேங்கி நிற்கிறது. காணி உரிமைப்பத்திரம் வழங்கினால் அதனை வங்கிகளில் வைத்து கடன்பெற்றாவது வீடுகளை கட்டிக்கொள்ளமுடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

தமது அடிப்படை கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளால் பலமுறை வாக்குறுதிகள் வழங்கியும் எவரும் அதனை தீர்த்துவைக்கவில்லை என்றும் எனவே தமது கோரிக்கைகளிற்கு தீர்வு கிடைக்கும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதன்போது, சம்பவ இடத்திற்கு சென்ற பிரதேச செயலாளர் ந.கமலதாசன், பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம் ஆகியோர் மக்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.

முதற்கட்டமாக கிராமத்தில் உள்ள 95 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், ஏனைய காணிகள் குளத்தின் ஒதுக்கத்திற்குள் வருகிறது என்றும் அதனை உரிய திணைக்களம் விடுவித்து தந்தால் அதற்கான உறுதிகளையும் வழங்க முடியும் என்று பிரதேச செயலாளர் தெரிவித்ததுடன், ஏனைய பிரச்சனைகள் தொடர்பாக சாதகமாக ஆராய்வதாக தெரிவித்திருந்தார். அத்தோடு, கிராமத்தினையும் பார்வையிட்டிருந்தார்.

இதேவேளை போராட்டம் இடம்பெறும் பகுதிக்கு சென்ற நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் கிராமத்தின் பின்பகுதியில் குளத்தின் நீரேந்து பகுதியில் 55 பேரது காணிகள் அமைந்துள்ளது. அதனை விடுவிப்பது தொடர்பாக எமது தலைமை அலுவலகமே தீர்மானிக்கமுடியும் என்றும் எனவே நீங்கள் கோரிக்கைகளை வழங்கினால் மேலதிக நடவடிக்கைகளிற்காக அதனை எமது தலைமை அலுவலகத்திற்கு அனுப்பிவைப்பதாக தெரிவித்தனர்.

எனினும் குறித்த மக்களின் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment