மியன்மாரில் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் சிறைப்பிடிக்கப்பட்டமைக்கு இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு கண்டனம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 3, 2021

மியன்மாரில் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் சிறைப்பிடிக்கப்பட்டமைக்கு இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு கண்டனம்

(நா.தனுஜா)

மியன்மார் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் சிறைப்பிடிக்கப்பட்டமை சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் முரணானது என்று தெரிவித்திருக்கும் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு, அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது.

மியன்மாருக்கு ஜனநாயகம் கொண்டுவருவதற்கான போராட்டத்தில் 15 ஆண்டுகள் வீட்டுக் காவலில் இருந்த தேசிய ஜனநாயக லீக் கட்சித் தலைவரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகியும் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட தலைவர்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளும் இராணுவத்தினரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனைக் கண்டனம் செய்து இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது மியன்மாரில் தேர்தலின் பின்னர் ஜனநாயக ஆட்சி தூக்கி வீசப்பட்டுள்ளமையை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். 

மியன்மாரின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரும் ஏனைய அதிகாரிகளும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செய்தி பெரிதும் அதிர்ச்சியளிக்கின்றது. 

அந்நாட்டு சட்டதிட்டங்களின்படி தமக்குரிய கடமையை சரிவர நிறைவேற்றி தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் சிறைப்பிடிக்கப்பட்டமை மிகவும் துரதிஷ்டவசமானதாகும்.

மியன்மார் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை சட்டத்திற்கு முரணானதும் ஜனநாயகத்திற்கு எதிரானதுமான செயற்பாடாகும். 

எனவே, அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் அதேவேளை, ஜனநாயக ரீதியில் செயற்படுமாறும் கோருகின்றோம் என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment