லிட்ரோ கேஸ் மற்றும் லிட்ரோ டேர்மினல் நிறுவனங்கள் குறித்து கோப் குழு கேள்வி - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 24, 2021

லிட்ரோ கேஸ் மற்றும் லிட்ரோ டேர்மினல் நிறுவனங்கள் குறித்து கோப் குழு கேள்வி

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் மற்றும் லிட்ரோ டேர்மினல் லங்கா நிறுவனம் ஆகியன கணக்காய்வாளர் நாயகத்தின் அறிவிப்பைப் புறக்கணித்து தனியார் நிறுவனத்தின் ஊடாக கணக்காய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டமை தொடர்பில் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) கவனத்தில் எடுத்துக்கொண்டது.

இந்த இரு நிறுவனங்கள் தொடர்பான கணக்காய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள கணக்காய்வாளர் நாயகத்துக்கு எவ்வித தடையும் இல்லையென சட்டமா அதிபர் ஊடாக ஆலோசனை பெறப்பட்டிருந்ததுடன், இந்த நிலைப்பாடு கணக்காய்வாளர் நாயகத்தினால் எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டிருந்தபோதும் பணிப்பாளர் சபையின் தீர்மானத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு KPMG என்ற தனியார் நிறுவனத்தின் ஊடாக கணக்காய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை குறித்து கோப் குழு கேள்வியெழுப்பியிருந்தது.

பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் நேற்று (23) கூடிய கோப் குழுக்கூட்டத்தில், சீஷேல் தீவில் இயங்கி வந்த இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் கிளை மூடப்பட்டமையால் 36 மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டமை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் கணக்காய்வு நடவடிக்கைகள் கணக்காய்வாளர் நாயகத்தினால் மேற்கொள்ளப்பட்டிருந்தபோதும், அதன் 99.94 வீத உரிமையைக் கொண்ட லிட்ரோ கேஸ் லங்கா லிமிடட் மற்றும் 100 வீத உரிமையைக் கொண்ட லிட்ரோ டேர்மினல் லங்கா லிமிடட் ஆகிய நிறுவனங்கள் மாத்திரம் தனியார் நிறுவனங்களினால் கணக்காய்வுகளை மேற்கொண்டமை குறித்து கோப் குழுவின் தலைவர் கவனம் செலுத்தினார்.

பணிப்பாளர் சபையின் ஊடாக எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய தனியார் துறையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றின் ஊடாக கணக்காய்வை மேற்கொள்வதற்கு சட்டரீதியாக எவ்வித தடையும் இல்லை என இங்கு கருத்துத் தெரிவித்த லிட்ரோ காஸ் லங்கா நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டார்.

விசேடமாக இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் கீழ் உள்ள ஏனைய நிர்வாக நிறுவனங்களும் எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளால் பாதிக்கப்படாதிருப்பதுடன், ஏனைய அரசாங்க நிறுவனங்களிலும் இவ்வாறான நிலைமைகள் ஏற்படாதிருப்பதை உறுதிப்படுத்துவது அனைவரினதும் பொறுப்பாகும் என்றும் கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் வலியுறுத்தினார். 

இவ்விடயம் தொடர்பில் கோப் குழு, சட்டமா அதிபரிடம் காரணங்களைக் கேட்டறிந்து, அதனை பிரதான கணக்காளரின் ஊடாகத் தெரியப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் மாலைதீவு மற்றும் சீஷேல் தீவுகளின் கிளைகள் மூடப்பட்டமையினால் ஏற்பட்ட நஷ்டம், குறித்த கிளைகளைத் திறப்பதற்கும் மூடுவதற்கும் கூட்டுத்தாபனத்திற்கு ஏற்பட்ட நஷ்டம் மற்றும் செலவு குறித்து விரைவில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் கோப் குழு, இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு அறிவித்தது.

இக்கூட்டத்தில் இராஜங்க அமைச்சர்களான நாளக கொடஹேவா, சுசில் பிரேமஜயந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பிக்க ரணவக்க, பிரேம்நாத் சீ.தொலவத்த, எஸ்.எம்.மரிக்கார், சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோரும், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம், லிட்ரோ காஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment