ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலின் உண்மைக் காரணிகள் அறிக்கையில் எவ்விடத்திலும் உள்ளடக்கப்படவில்லை - பேராயார் எவ்வாறான தீர்மானத்தை எடுப்பார் என்பதை எதிர்பார்த்துள்ளோம் : விஜித ஹேரத் - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 24, 2021

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலின் உண்மைக் காரணிகள் அறிக்கையில் எவ்விடத்திலும் உள்ளடக்கப்படவில்லை - பேராயார் எவ்வாறான தீர்மானத்தை எடுப்பார் என்பதை எதிர்பார்த்துள்ளோம் : விஜித ஹேரத்

(இராஜதுரை ஹஷான்)

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் உண்மை காரணிகள் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் எவ்விடத்திலும் உள்ளடக்கப்படவில்லை. இதனை ஆணைக்குழுவின் பிரதான குறைபாடாக கருத வேண்டும். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் தேசிய பாதுகாப்பை வேண்டுமென்றே பலவீனப்படுத்தினார் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளமை ஒன்றும் புதிய விடயமல்ல. இதனை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. அறிக்கை குறித்து பேராயார் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை எவ்வாறான தீர்மானத்தை எடுப்பார் என்பதை எதிர்பார்த்துள்ளோம்.

எதிர்காலத்தில் அடிப்படைவாதம் தலைத்தூக்குவதை தடுக்கவும், பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அமைப்புக்களை தடை செய்யவும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் துரிதமாக செயற்படுத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், துரதிஸ்டவசமாக நாட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 21 ஆம் திகதி தற்கொலை குண்டுதாரிகளினால் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் முன்னெடுக்கப்பட்டன. 

இத்தாக்குதலுக்கு பொறுப்புகூற வேண்டியது யார், குண்டுதாரிகளின் உண்மையான நோக்கம் என்ன, தாக்குதல்தாரிகளை இயக்கியது யார், இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் ஏற்படுவதை எவ்வாறு தடுப்பது என்ற காரணிகளை அடிப்படையாகக கொண்டு ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் குறித்து ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு 2019ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நியமிக்கப்பட்டது.

ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் பலதரப்பட்ட வழிமுறைகளில் விசாரணைகளை முன்னெடுத்து இறுதிக்கட்ட அறிக்கையினை கடந்த மாதம் 31 ஆம் திகதி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் கையளித்தார்கள். அறிக்கை கையளிக்கப்பட்டு 22 நாட்களுக்கு பின்னரே அறிக்கை சபாநாயகருக்கு வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கூட இதுவரையில் வழங்கப்படவில்லை..

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு புதிய விடயங்கள் எதனையும் குறிப்பிடவில்லை. கடந்த அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சிலும், பாதுகாப்பு துறையிலும் பொறுப்பில் இருந்தவர்கள் பொறுப்பினை முறையாக செயற்படுத்தமால் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார்கள் என்றும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் அடிப்படைவாதம் தலைதூக்குவதை தடை செய்யும் வகையில் ஒரு சில அமைப்புக்களை தடை செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் பாதுகாப்பு அமைச்சு தன் பொறுப்பில் வைத்து பொறுப்பற்ற வகையில் செயற்பட்டு தேசிய பாதுகாப்பினை பலவீனப்படுத்தினார் என்று குறிப்பிட்டுள்ளமை புதிய விடயமல்ல. 

நாட்டு மக்கள் இவரின் செயற்பாட்டை நன்கு அறிவார்கள். அரசாங்கத்தில் இருந்த தனிப்பட்ட முரண்பாட்டை தீர்த்துக் கொள்ள பாதுகாப்பு சபை கூட்டத்தை பயன்படுத்திக் கொண்டு தேசிய பாதுகாப்பினை பலவீனப்படுத்தினார்.

எதிர்காலத்தில் அடிப்படைவாதம் தோற்றம் பெறாமலிருக்க ஒருசில அமைப்புக்களை தடை செய்வதுடன் அவ்வமைப்புக்களின் தலைமைத்துவத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளமையும் ஏற்றுக் கொள்ள கூடியது. 

ஒரு சில பௌத்த அமைப்புக்களின் கடும்போக்கான செயற்பாடு நாட்டின் மத அடிப்படையிலான முரண்பாடுகள் தோற்றம் பெறுவதற்கு மூல காரணி என்பதை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஆதாரங்களுடன் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது. இதனை நாட்டு மக்கள் எதிர்பார்க்கவில்லை. 

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலின் உண்மை காரணியையும், தற்கொலை குண்டுதாரிகளை இயக்கியது யாரென்றும் எவ்விடத்திலும் குறிப்பிடவில்லை. இதனை ஆணைக்குழுவின் பிரதான குறைபாடாக கருத வேண்டும். 

அடிப்படைவாத அமைப்பின் தலைவர் முதல் தாக்குதலில் தன்னை மாய்த்துக் கொள்ளமாட்டார் என்றும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அவ்வாறாயின் தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் தலைவரல்ல தலைவர் யாரென்று கண்டுப்பிடிக்காமல் இருப்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்றே குறிப்பிட வேண்டும்.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையினை கொண்டு பேராயார் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை எத்தீர்மானத்தை எடுப்பார் என்பதை எதிர்பார்த்துள்ளோம். ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் தொடர்பில் எழுந்த பிரதான கேள்விக்கு ஆணைக்குழுவின் அறிக்கை ஊடாக பதில் கிடைக்கவில்லை என்றார்.

No comments:

Post a Comment