இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் உரிமை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு கிடையாது - பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 10, 2021

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் உரிமை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு கிடையாது - பேராசிரியர் ஜி.எல். பீரிஸ்

(இராஜதுரை ஹஷான்)

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் உரிமை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு கிடையாது. மனித உரிமை ஆணையாளர் வரையறைக்குட்பட்டு செயற்பட வேண்டும் என தெரிவித்த கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், யுத்தம் முடிவடைந்த பிறகு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் குறித்து சர்வதேசம் முன்வைத்த கோரிக்கைகள் பலவற்றை முழுமையாக நிறைவேற்றியுள்ளோம். தேசிய பாதுகாப்பினையும், நாட்டின் சுயாதீனத்தன்மையினையும் முன்னிலைப்படுத்தி அரசாங்கம் செயற்படும் எனவும் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத் தொடரில் இலங்கை மீதான விவாதம் எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான விவாதத்தின் போது அரசாங்கம் இம்முறை தீர்க்கமான தீர்மானங்களை எடுக்கும்.

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கை நாட்டின் சுயாதீனத்தன்மைக்கும், மனித உரிமைகள் பேரவையின் பொறுப்பிற்கும் அப்பாற்பட்டது. இலங்கையின் அரசியலமைப்பு விவகாரம், இராணுவ அதிகாரிகளுக்கு பதவியுயர்வு, தேசிய பாதுகாப்பு, பாராளுமன்ற சட்டம் ஆகிய விடயங்களில் தலையிடும் உரிமை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளருக்கு கிடையாது.

30 வருட கால யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் துரிதமாக அபிவிருத்தி செய்யப்பட்டன. தமிழ் மக்கள் விவகாரத்தில் சர்வதேசம் கேட்டுக் கொண்ட விடயங்களை முழுமையாக செயற்படுத்தியுள்ளோம். விடுதலை புலிகள் அமைப்பின் போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு அவர்கள் சமூகத்தோடு சமூகமாக்கப்பட்டார்கள்.

அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்காது. பொது கொள்கையின் நிமித்தம் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படும். வடக்கு மாகாணத்தில் கல்வித்துறையை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad