போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு - மியான்மர் ராணுவத்துக்கு கண்டனம் தெரிவித்தார் ஐ.நா. பொதுச் செயலாளர் - News View

Breaking

Post Top Ad

Sunday, February 21, 2021

போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு - மியான்மர் ராணுவத்துக்கு கண்டனம் தெரிவித்தார் ஐ.நா. பொதுச் செயலாளர்

மியன்மாரில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு ஐ.நா பொதுச் செயலாளர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மியன்மாரில் ராணுவ ஆட்சிக்கு எதிராகவும் ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்களை உடனடியாக விடுவிக்க கோரியும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தலைநகர் நேபிடா, யாங்கூன் மற்றும் மண்டலே நகரங்களில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்துகிறார்கள்.

ராணுவம் விதித்துள்ள தடையை மீறி இந்தப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.‌ போராட்டத்தை ஒடுக்குவதற்கு ராணுவம் அடக்குமுறையை கையாண்டு வந்தாலும் நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. 

நேற்று மண்டலே நகரில் உள்ள கப்பல் தளத்தில் உள்ள ஏராளமான தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியபோது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 2 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.

மியன்மார் ராணுவத்தின் இந்த ஒடுக்குமுறைக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமைதியாக போட்டம் நடத்துவோருக்கு எதிராக உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் படைகளை பயன்படுத்துவது, மிரட்டல் மற்றும் துன்புறுத்தல் ஆகியவை ஏற்றுக் கொள்ள முடியாதது என ஐ.நா பொதுச் செயலாளர் கூறி உள்ளார்.

அமைதியான கூட்டத்திற்கு அனைவருக்கும் உரிமை உண்டு என்று கூறிய அவர், தேர்தல் முடிவுகளை மதித்து மக்களாட்சிக்கு திரும்புமாறு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

வன்முறையை சுட்டிக்காட்டி மியன்மார் ராணுவத்தின் பிரதான பக்கத்தை பேஸ்புக் நிறுவனம் நீக்கி உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad