(எம்.ஆர்.எம்.வசீம்)
கொவிட் தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் கல்வி பொதுத் தராதர சாதாரண கடமையில் ஈடுபடும் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் காரியாலய பணிக்குழாத்தினருக்கு கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க கல்வி அமைச்சர் உட்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் மத்திய மாகாண செயலாளர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்தார்.
கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சை கடமைகளில் ஈடுபட இருக்கும் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றுவதன் தேவை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாடளாவிய ரீதியில் 4,513 பரீ்டசை மத்திய நிலையங்களில் மார்ச் முதலாம் திகதி கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை ஆரம்பாக இருக்கின்றது.
இதற்காக அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பரீட்சை மண்டப உதவியாளர்கள் என சுமார் 46 ஆயிரம் பேர் கடமையில் ஈடுபட இருக்கின்றனர்.
கொவிட் தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் பரீட்சை கடமையில் ஈடுபடும் இவர்களுக்கு கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க கல்வி அமைச்சர் உட்பட உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
நாட்டில் நாளாந்தம் கொவிட் மரணங்கள் மற்றும் தொற்றாளர்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், சுமார் 6 இலட்சம் மாணவர்கள் தோற்றும் இந்த பரீட்சையில் அவர்களில் பாதுகாப்பு தொடர்பாக கல்வி அதிகாரிகள் கவனம் செலுத்தாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
கொவிட் தொற்று நிலைமையில் தேசிய தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தின் தேவை தொடர்பில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றோம்.
தற்போதைய நிலைமையில் முன்னுரிமை மற்றும் விரைவான வேலைத்திட்டமாக, எதிர்வரும் தினங்களுக்குளாவது பரீட்சை கடமைகளில் ஈடுபட இருக்கும் அதிபர், ஆசிரியர்கள் உட்பட பணிக்குழாத்தினருக்கு கொவிட் தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment