கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சந்தேகம் கொள்வது அவசியமற்றது - நல்லாட்சியின் விசாரணை அறிக்கை எந்தளவிற்கு உண்மைத் தன்மை என்பது கேள்விக்குறியே : பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 16, 2021

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சந்தேகம் கொள்வது அவசியமற்றது - நல்லாட்சியின் விசாரணை அறிக்கை எந்தளவிற்கு உண்மைத் தன்மை என்பது கேள்விக்குறியே : பேராசிரியர் ஜி.எல். பீரிஸ்

(இராஜதுரை ஹஷான்)

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை குறித்து கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சந்தேகம் கொள்வது அவசியமற்றது. குண்டுத் தாக்குதலுடன; தொடர்புடையவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள். குற்றவாளியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்களை அரசியல் இலாபம் கருதி அரசாங்கம் பாதுகாக்காது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் இருந்தவர்களை பகிரங்கப்படுத்தி அவர்களை சட்டத்தின் முன் முன்னிலைப்படுத்துவோம் என்ற வாக்குறுதியை பொதுஜன பெரமுன கொள்கை பிரகடனமாக வெளிட்டது. 

நல்லாட்சி அரசாங்கம் தேசிய பாதுகாப்பை திட்டமிட்டு பலவீனப்படுத்தியதை அடிப்படைவாதிகள் சாதகமாக பயன்படுத்தி தங்களின் நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டார்கள்.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை எந்தளவிற்கு உண்மை தன்மையுடன் காணப்பட்டது என்பது கேள்விக்குட்படுத்தப்பட்டது. 

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாட்டை துரிதப்படுத்தினார்.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணை குறித்து தான் அதிருப்தியடைவதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார். அதிருப்தியடைவது அவசியமற்றது என்றே குறிப்பிட வேண்டும். அரசாங்கத்தின் மீது வைத்த நம்பிக்கையை தொடர்ந்து பேணுவது அவசியமாகும்.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அறிக்கையில் உள்டக்கப்பட்டுள்ள விடயங்கள் முழுமையாக செயற்படுத்தப்படும். அரசியல் நோக்கங்களை கருத்திற் கொண்டு எவரும் பாதுகாக்கப்பட மாட்டார்கள். என்பதை தெளிவாக குறிப்பிட்டுக் கொள்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment