இலங்கை விஜயத்துக்காக இந்திய வான் வழியை பயன்படுத்தவுள்ளார் பாகிஸ்தான் பிரதமர் - News View

About Us

About Us

Breaking

Monday, February 22, 2021

இலங்கை விஜயத்துக்காக இந்திய வான் வழியை பயன்படுத்தவுள்ளார் பாகிஸ்தான் பிரதமர்

இலங்கை செல்லும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் விமானம் இந்திய வான் வெளியில் பறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று இலங்கைக்கு சுற்றுப்பயணம் செல்கிறார். இந்த நிலையில்  பயணிக்கும் விமானம் இந்திய வான் வெளியில் பறப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

கடந்த 2019ம் ஆண்டு இந்திய பிரதமர் மோடி அமெரிக்கா செல்வதற்கு அவர் பயணம் செய்த விமானம் பாகிஸ்தான் வான் வெளியை பயன்படுத்த பாகிஸ்தான் அரசு அனுமதி மறுத்தது.

காஷ்மீரில் மனித உரிமை மீறல் நடப்பதாக கூறி பிரதமர் மோடிக்கு அனுமதி மறுப்பதாக பாகிஸ்தான் தெரிவித்தது.

ஆனாலும் சர்வதேச விதிகளின்படி இந்திய வான் வெளிக்குள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் விமானம் பறக்க இந்தியா அனுமதி வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

முக்கிய தலைவர்கள் செல்லும் விமானங்கள் சர்வதேச வான் வெளியை பயன்படுத்த அனுமதி வழங்குவது வழக்கமான ஒன்றாகும்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது இலங்கை சுற்றுப்பயணத்தில் அந்த நாட்டு பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்துவதாக இருந்தது. ஆனால் அந்த உரை நிகழ்ச்சியை ரத்து செய்வதாக இலங்கை அறிவித்தது.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இம்ரான்கான் உரை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக இலங்கை தெரிவித்தது.

ஆனால் இலங்கை பாராளுமன்றத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து இம்ரான்கான் பேசினால் இந்தியாவுடன் மனக்கசப்பு ஏற்படும் என்பதால் உரை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment