இன்று இலங்கை வருகிறார் பாகிஸ்தான் பிரதமர் : ஜனாதிபதி, பிரதமருடன் சந்திப்பு : ஒப்பந்தங்களிலும் கைச்சாத்து : முஸ்லிம் தலைவர்கள் சந்திக்க கோரிக்கை : கவனயீர்ப்பு போராட்டத்திற்கும் ஏற்பாடு - News View

Breaking

Post Top Ad

Monday, February 22, 2021

இன்று இலங்கை வருகிறார் பாகிஸ்தான் பிரதமர் : ஜனாதிபதி, பிரதமருடன் சந்திப்பு : ஒப்பந்தங்களிலும் கைச்சாத்து : முஸ்லிம் தலைவர்கள் சந்திக்க கோரிக்கை : கவனயீர்ப்பு போராட்டத்திற்கும் ஏற்பாடு

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று இலங்கை வருகிறார்.

பாகிஸ்தான் பிரதமருக்கு விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பளிக்கப்படவுள்ளதுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பாகிஸ்தான் பிரதமர் தலைமையிலான தூதுக் குழுவை வரவேற்கவுள்ளார்.

அதனையடுத்து விமான நிலையத்தில் பாகிஸ்தான் பிரதமருக்கு கௌரவமளிக்கும் வகையில் இராணுவ அணிவகுப்பு மரியாதையும் இடம்பெறவுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இலங்கையில் தங்கியிருக்கும் இரண்டு தினங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. 

பிரதமருடனான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையையடுத்து அலரி மாளிகையில் இரு தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்படவுள்ளது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் பிரதமர்கள் முன்னிலையில் மேற்படி புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

முக்கிய ராஜதந்திரமட்ட பேச்சுவார்த்தையுடன் வர்த்தகம், முதலீடு, சுகாதாரம், கல்வி, விவசாயம், விஞ்ஞானதொழில்நுட்பம், பாதுகாப்பு, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பிலும் முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெற உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றவிருந்த நிலையில் அது பின்னர் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இலங்கை வரும் பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடனான சந்திப்பிற்கு முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அனுமதி கோரியுள்ளனர்.

இதேவேளை பாகிஸ்தான் பிரதமரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட்டமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் கட்டாய தகனம் செய்யப்படுகின்றமையை எதிர்த்தும், நிபுணர் குழுவின் பரிந்துரைகளை உடன் அமுல்படுத்துமாறும் வலியுறுத்தி இன்று செவ்வாய்கிழமை மாலை 3 மணிக்கு பலவந்த தகனத்திற்கு எதிரான தேசிய அமைப்பினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதில் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். 

இந்த வருடத்தில் பாகிஸ்தான் பிரதமர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயமாகவும் இவ் வருடத்தில் இலங்கைக்கு சர்வதேச தலைவர் ஒருவர் விஜயம் செய்யும் முதல் முறையாகவும் பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயம் அமையவுள்ளது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad