(இராஐதுரை ஹஷான்)
ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை அறிக்கையின் உள்ளடக்கங்கள் அனைத்தும் குறுகிய காலத்தில் முழுமையாக செயற்படுத்தப்படும். அடிப்படைவாத செயற்பாடுகள் எதிர்காலத்தில் தலைதூக்காத அளவிற்கு பலமான தீர்மானங்கள் எடுக்கப்படும் என துறைமுகம் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விசாரணை அறிக்கை குறித்து எதிர்க்கட்சியினரும், சிவில் அமைப்புக்களும் மாறுப்பட்ட பல விமர்சனங்களை முன்வைத்துள்ளார்கள். நிபுணர் குழுவினரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
முறையான விசாரணை நடவடிக்கைகளுக்கு அமையவே அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் 10 பிரதான விடயங்கள் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் பல விடயங்கள் தொடர்ந்து வெளிப்படுத்தப்படும். அறிக்கையின் உள்ளடக்கத்தை குறுகிய காலத்தில் முழுமையாக செயற்படுத்துவோம்.
அடிப்படைவாத செயற்பாடுகள் எதிர்காலத்தில் தலைதூக்காத அளவிற்கு பலமான தீர்மானங்கள் பல ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசியல் மற்றும் குறுகிய நோக்கங்களை தவிர்த்து அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும், ஏனைய தரப்பிரும் நாட்டின் நலனை கருத்திற் கொண்டு ஆதரவு வழங்க வேண்டும்.
கடந்த அரசாங்கம் தேசிய பாதுகாப்பினை அரசியல் தேவைக்காக பலவீனப்படுத்தியதால் ஏப்ரல் 21 தின குண்டுத் தாக்குதல் சம்பவத்தை தடுக்க புலனாய்வு பிரிவினரும், பாதுகாப்பு பிரிவினரும் பலவீனமடைந்துள்ளார்கள் என்பது அறிக்கையின் பல காரணிகளின் ஊடாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆகவே தேசிய பாதுகாப்பினை எக்காரணிகளுக்காகவும் சவாலுக்குட்படுத்த முடியாது. தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கி அரசாங்கம் எந்நிலையிலும் செயற்படும்.
அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் சாரம்சம் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படும்.
தேசிய பாதுகாப்பு காரணிகளை கருத்திற் கொண்டு ஒரு சில விடயங்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும். ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் குறித்து அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றும் எவரும் அச்சம் கொள்ள வேண்டாம் என்றார்.
No comments:
Post a Comment