நாளாந்த சம்பளத்திற்கு போராடுவதை கைவிட்டு இப்போது மாதாந்த சம்பளத்திற்கு போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் - எம்.உதயகுமார் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 9, 2021

நாளாந்த சம்பளத்திற்கு போராடுவதை கைவிட்டு இப்போது மாதாந்த சம்பளத்திற்கு போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் - எம்.உதயகுமார்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

சம்பளம் என்ற ஒரு விடயத்தை மாத்திரம் இறுதித் தீர்வாக ஏற்றுக் கொள்ள முடியாது. இதனையும் தாண்டி தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய தொழில் உரிமைகள், தொழில் ரீதியான சலுகைகள் போன்றவற்றிற்கும் கூடிய கவனம் செலுத்தபட வேண்டும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை, தொழில் அமைச்சின் கீழுள்ள ஊழியர் சகாய நிதியச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், இவ்வளவு காலமாக இழுபறி நிலையில் இருந்த பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் நேற்றுடன் சம்பள நிர்ணய சபையின் தலையீட்டுடன் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் யதார்த்தம் என்னவென்றால் இந்த பிரச்சினை இழுத்தடிப்பு செய்யப்படும் என்பதும், மேலும் பல குழப்பங்களுக்கு வழிவகுக்கும் என்பதும் தெளிவாக தெரிகின்றது.

சம்பளம் என்ற ஒரு விடயத்தை மாத்திரம் இறுதித் தீர்வாக ஏற்றுக் கொள்ள முடியாது. இதனையும் தாண்டி தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய தொழில் உரிமைகள், தொழில் ரீதியான சலுகைகள் போன்றவற்றிற்கும் கூடிய கவனம் செலுத்தபட வேண்டும்.

சம்பள நிர்ணய பேச்சுவார்த்தையானது தொழிலாளர்களுக்கு சாதகமான விதத்தில் அமையவில்லை, சம்பள நிர்ணய சபையில் அடிப்படை சம்பளம் 900 ரூபா எனவும் மேலதிக கொடுப்பனவு 100 ரூபா என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் 13 நாட்கள் மாத்திரமே வேலை வழங்க முடியும் என நிறுவனங்கள் அறிவித்துள்ளமை வெட்ட வெளிச்சமாக ஊடகங்கள் மூலமாக தெளிவாக வெளிவந்துள்ளது. பலர் அதனை நிராகரித்தாலும் அதுதான் உண்மை. 

ஒருபக்கம் சம்பளத்தை அதிகரித்து விட்டு மறுபக்கம் வேலை நாட்களை குறைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது தொழிலாளர்களின் மாதாந்த சம்பளத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாது, மாதாந்த சம்பளத்தில் பாரிய குறைப்பையும் ஏற்படுத்தும். 

நாளாந்த சம்பளத்திற்கு போராடுவது கைவிடப்பட்டு இப்போது மாதாந்த சம்பளத்திற்காக போராட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

சம்பள நிர்ணய சபையின் கோரிக்கையை நாம் முழுமையாக வரவேற்கிறோம். ஆனால் மாதாந்த சம்பளமாக 25 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும். இதனை நிறைவேற்ற வேண்டும். கூட்டு ஒப்பந்தத்தை போல இதுவும் ஏமாற்று வேலையாக அமைந்துவிடக் கூடாது. இது எமது மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் விடயமாகும் என்றார்.

No comments:

Post a Comment