சுதந்திரத்தின் பின்னரான இலங்கையில் ஆட்சிபீடமேறிய அரசாங்கங்களினால் இழைக்கப்பட்ட மிக முக்கிய தவறுகளை மதிப்பீடு செய்வதற்கான வாய்ப்பை சுதந்திர தினம் வழங்குகின்றது. குறிப்பாக அனைத்துப் பிரஜைகளுக்குமான சுபீட்சத்துடன் கூடிய ஸ்திரமானதும் அமைதியானதுமான நாட்டைக் கட்டியெழுப்புவதில் ஏற்பட்டிருக்கும் தோல்வியைத் தற்போது உணர முடிகின்றது என மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் சுட்டிக்காட்டியிருக்கிறது.
மேலும், இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரால் மிகவும் காட்டமான அறிக்கையொன்று வெளியிடப்பட்டதன் பின்னர் கொண்டாடப்படவுள்ள முதல் சுதந்திரதினம் இது என்று கூறியிருக்கும் அந்நிலையம், நாட்டின் பிரஜைகள் அனைவரினதும் உரிமைகளை உறுதிப்படுத்தும் விதமாக செயற்படுவதற்கு அரசாங்கம் தவறும் பட்சத்தில், இலங்கை தொடர்பில் ஐ.நா உறுப்பு நாடுகள் வலுவானதொரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது.
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தில் நாட்டில் நிலவும் இன மதங்களுக்கு இடையிலான உறவு மற்றும் ஜனநாயகக் கட்டமைப்புக்களின் மீதான அச்சுறுத்தல்கள் தொடர்பில் நாம் பெரிதும் அவதானம் செலுத்தியிருக்கிறோம்.
உலகலாவிய தொற்று நோயினால் ஏற்பட்ட முன்னரே எதிர்வு கூறப்படாத சவால்கள், வலுவடைந்துவரும் சர்வாதிகாரப்போக்கு, இராணுவ மயமாக்கப்பட்ட அரச நிர்வாகம், உயர்வடைந்துவரும் தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கு மற்றும் அடிப்படை சுதந்திரத்தின் மீதான அச்சுறுத்தல் ஆகியவற்றின் பின்னணியிலேயே இந்தக் கரிசனை எழுந்துள்ளது.
அதுமாத்திரமன்றி தீவிரமடைந்துள்ள கண்காணிப்புக்கள், அடக்குமுறைகள் மற்றும் சிறுபான்மையினரை இலக்கு வைக்கும் நடவடிக்கைகளின் விளைவாக கருத்துகளை அல்லது விமர்சனங்களை முன்வைப்பதற்கான இடைவெளி சுருங்கி வருகின்றது.
மேலும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, ரம்ஸி ரசீக், அனாஃப் ஜஸீம் உள்ளிட்ட எழுத்தாளர்கள், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள் தன்னிச்சையாகக் கைது செய்யப்படுவதுடன் தடுத்து வைக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மேலும் இதன்போது உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படாததுடன், இந்தக் கைது இடம்பெறுவதற்கான காரணம் என்ன என்ற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளமையை அவதானிக்க முடிகின்றது.
அத்தோடு எவ்வித விஞ்ஞானபூர்வ அடிப்படைகளுமின்றி மேற்கொள்ளப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களைக் கட்டாயமாகத் தகனம் செய்வதற்கான தீர்மானமும் பாரிய கரிசனைகளைத் தோற்றுவித்திருப்பதுடன் இது இலங்கையின் சிறுபான்மையின முஸ்லிம் சமூகத்தை நேரடியாகப் பாதிப்பதாகவும் அமைந்துள்ளது. இவையனைத்தும் இலங்கையின் அரச கொள்கையில் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் ஆதிக்கம் வலுவடைந்து வருகின்றமையைக் காண்பிக்கின்றது.
சுதந்திரத்தின் பின்னரான இலங்கையில் ஆட்சிபீடமேறிய வெற்றிகரமான அரசாங்கங்களினால் இழைக்கப்பட்ட மிக முக்கிய தவறுகளை விளங்கிக் கொள்வதற்கான வாய்ப்பை சுதந்திர தினம் வழங்குகின்றது. குறிப்பாக அனைத்துப் பிரஜைகளுக்குமான சுபீட்சத்துடன் ஸ்திரமானதும் அமைதியானதுமான நாட்டைக் கட்டியெழுப்புவதில் ஏற்பட்டிருக்கும் தோல்வியை உணர முடிகின்றது.
கடந்த காலங்களைப் பொறுத்த வரையில், இலங்கையில் பெரும்பாலான அரசாங்கங்கள் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு எவ்வித முயற்சிகளை எடுக்காதது மாத்திரமல்ல, மாறாக அவற்றினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை அதிகரித்திருப்பதுடன் சிறுபான்மையின சமூகங்களை மேலும் ஒடுக்கியிருக்கிறது என்றே கூற வேண்டும்.
இந்நிலையில் 73 ஆவது சுதந்திர தினம் ஒரு தொற்று நோய்ப் பரவலுக்கிடையில் நடத்தப்படும் முதலாவது சுதந்திர தினம் என்பதுடன் தற்போது நிலவும் குழப்பகரமான நிலைவரங்களை மதிப்பாய்வு செய்ய வேண்டிய அவசியமும் காணப்படுகின்றது.
அதேவேளை தற்போது உருவாகியிருக்கும் பொருளாதார மற்றும் சமூக ரீதியான சவால்கள் தொடர்பில் உடனடியாக அவதானம் செலுத்தப்பட வேண்டும். எனினும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்து ஆராய்வதற்குப் பதிலாக விசேட செயலணிகளை அமைப்பதிலும் முன்னாள் இராணுவ அதிகாரிகளுக்கு முன்னுரிமை அளிப்பதிலுமே கவனம் செலுத்தப்பட்டுவருகின்றது.
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரால் மிகவும் காட்டமான அறிக்கையொன்று வெளியிடப்பட்டதன் பின்னர் கொண்டாடப்படவுள்ள முதல் சுதந்திர தினமும் இதுவாகும்.
இத்தகைய பின்னணியில், இலங்கைப் பிரஜைகள் அனைவரினதும் உரிமைகளை உறுதிப்படுத்தும் விதமாக அரசாங்கம் செயற்படுவதற்குத் தவறும் பட்சத்தில், இலங்கை தொடர்பில் ஐ.நா உறுப்பு நாடுகள் வலுவானதொரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நாம் வலியுறுத்துகின்றோம். அது இலங்கையில் மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி, பொறுப்புக் கூறல், நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதி செய்வதற்கு உதவியாக அமையும்.
இவ்வாரத்தைக் கொண்டாடுவதற்கு அப்பால், இலங்கையின் தற்போதைய நிலைவரம் மிகவும் அவதானத்திற்குரியதாக இருக்கின்றது. தவறான நம்பிக்கைகளின் விளைவாக வரலாற்றுப் பிழைகள் மீண்டும் இழைக்கப்படும் அதேவேளை, இம்முறை அதன் விளைவு வேறானதாக இருக்கலாம்.
எனினும் தற்போது இலங்கையில் நிலவும் போக்குகள் புறக்கணிக்கப்படக்கூடாது. அதுமாத்திரமன்றி நாட்டின் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை அனைவரும் சவாலுக்கு உட்படுத்த வேண்டியது அவசியமாகும் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment