(இராஜதுரை ஹஷான்)
நாவலப்பிட்டி புகையிரத நிலையத்துக்கு சொந்தமான புகையிரத அதிபர் இல்லம் நாவலப்பிட்டி பகுதியில் பிரபல்யமான அரசியல்வாதியினால் கையகப்படுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அரச ஊழியர்களின் செயற்பாடுகளுக்கு அரசியல்வாதிகள் இடையூறு விளைவித்தால் புகையிரத சேவையில் ஈடுபடும் தொழிற்சங்கங்களை ஒன்றினைத்து தொடர் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவோம் என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் பிரதான செயலாளர் கசுன் சாமர தெரிவித்தார்.
புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நாவலப்பிட்டி புகையிரத நிலைய அதிபருக்குரிய கம்பளை வீதி - நாவலப்பிட்டி என்ற முகவரியிலுள்ள உத்தியோகப்பூர்வ இல்லத்தையும் புகையிரத திணைக்கள பணியாளர்களின் 2 இல்லங்களையும் அரசியல் காரணிகளின் அடிப்படையில் தகர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொறுப்பற்ற வகையில் செயற்பட்டால் தொடர் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாவலப்பிட்டி புகையிரத நிலையத்தில் தற்போது 19 நிலைய அதிபர்கள் கடமையாற்றுகின்றனர். இவர்களில் 6 பேருக்கு மாத்திரமே புகையிரத திணைக்களத்தினால் உத்தியோகப்பூர்வ இல்லங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கு முன்னர் புகையிரத நிலைய அதிபர்களுக்குரிய 2 உத்தியோகப்பூர்வ இல்லங்கள் அரசியல் அழுத்தத்துடன் அரசியல்வாதியொருவரின் தனிப்பட்ட தேவைகளுக்காக ஒதுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாடு தழுவிய ரீதியில் 396 புகையிரத நிலையங்கள் உள்ளன. இவற்றில் 200 உப புகையிரத நிலையங்கள் புகையிரத திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன 396 புகையிரத நிலையங்களிலும் பாரிய குறைப்பாடுகள் காணப்படுகின்றன. இவ்வாறான நிலையில் புகையிரத திணைக்களத்துக்கு சொந்தமான வளங்கள் அரசியல் வாதிகளினால் முறையற்ற வகையில் பயன்படுத்தப்படுகின்றமை கண்டிக்கத்தக்கது.
No comments:
Post a Comment