இறுதி நேரத்தில் இரத்தானது பாகிஸ்தான் பிரதமரின் பாராளுமன்ற உரை - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 16, 2021

இறுதி நேரத்தில் இரத்தானது பாகிஸ்தான் பிரதமரின் பாராளுமன்ற உரை

(லியோ நிரோஷ தர்ஷன்)

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பாராளுமன்ற உரை இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்வரும் 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கை வருகின்றார்.

இந்த விஜயமானது இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை சந்தித்து பாக்கிஸ்தான் பிரதமர் கலந்துரையாடவுள்ளார்.

மேலும் 24 ஆம் திகதி கொழும்பில் இடம்பெறும் வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளதுடன் பாராளுமன்ற விஜயம் மற்றும் விளையாட்டு மையம் திறப்பு ஆகிய நிகழ்வுகளில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கலந்துகொள்வார் என தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமரின் விஜயம் 22 ஆம் திகதி இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் 23 ஆம் திகதியே இடம்பெறுவதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் உயர்ஸ்தாணிகராலயம் ஊடாக இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றுவது குறித்து கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இவ்வாறானதொரு நிலையில் பாகிஸ்தான் பிரதமரின் பாராளுமன்ற உரை இடம்பெறாது என பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஷான் விஜேதுங்க தெரிவித்தார்.

பாகிஸ்தான் பிரதமரின் விஜயம் மற்றும் அவரது பாராளுமன்ற உரை தொடர்பிலும் கடந்த 8 ஆம் திகதி திங்கட்கிழமை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இதன்போது பாராமன்றத்தில் உரை நிகழ்த்துவதற்கு வாய்ப்பளிக்க இணக்கப்பாடு எட்டப்பட்ட போதிலும் இறுதி தீர்மானத்தை எடுக்கும் நோக்கில் 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போதே பாகிஸ்தான் பிரதமருக்கு 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கான வாய்ப்பை அளிக்க முடியும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்த போதிலும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை.

மேலும் தேநீர் விருந்துபசாரம், பன்னாட்டு இராஜதந்திரிகள் அழைப்பு மற்றும் சுகாதார விதிமுறைகள் உள்ளிட்ட விடயங்கள் சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தது.

பொதுவாகவே இலங்கை வரும் பன்னாட்டு தலைவர்களும் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதில்லை. ஆனால் விசேடமாக கோரிக்கை விடும் பட்சத்தில் இராஜதந்திர சம்பிரதாயங்களுக்கமைவாக உரையாற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.

இவ்வாறானதொரு இராஜதந்திர சம்பிரதாயங்களுக்கமையவே இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வந்திருந்த போது பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தியிருந்தார். எவ்வாறாயினும் பாகிஸ்தான் பிரதமரின் பாராளுமன்ற உரை இறுதி நேரத்தில் கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad