மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது ஒரு அரசியல் நாடகமோ, ஊடக காட்சிப்படுத்தலோ அல்ல - எடுக்கப்பட்ட முடிவுகளை சாட்டாக பயன்படுத்தி தவறு செய்பவர்களுக்கு இடம் கிடையாது - பொருளாதாரத்தை வலுப்படுத்தாமல் தேசியத்தை பாதுகாக்க முடியாது : ஜனாதிபதி கோட்டாபய - News View

About Us

About Us

Breaking

Saturday, February 6, 2021

மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது ஒரு அரசியல் நாடகமோ, ஊடக காட்சிப்படுத்தலோ அல்ல - எடுக்கப்பட்ட முடிவுகளை சாட்டாக பயன்படுத்தி தவறு செய்பவர்களுக்கு இடம் கிடையாது - பொருளாதாரத்தை வலுப்படுத்தாமல் தேசியத்தை பாதுகாக்க முடியாது : ஜனாதிபதி கோட்டாபய

மக்களிடம் வந்து பிரச்சினைகளைத் தீர்ப்பது ஒரு அரசியல் நாடகமோ அல்லது ஊடக காட்சிப்படுத்தலோ அல்ல என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தினார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் சுமார் நான்கு ஆண்டுகள் உள்ளன. கிராமத்திற்குச் செல்வது அதிகாரத்திலிருந்து செய்ய வேண்டிய பணியை நிறைவேற்றுவதற்காகும். எதிர்க்கட்சியிலிருக்கும் போது சென்றாலும், வேறு எந்த ஜனாதிபதியும் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க பின்தங்கிய கிராமங்களுக்குச் செல்லவில்லை. கொழும்பில் இருந்துகொண்டு அதிகாரிகளிடம் மட்டுமே கலந்தாலோசித்து மக்களின் பிரச்சினைகளை அடையாளம் காண்பது எனது நடைமுறை அல்ல. யார் இந்த முறைமையை விமர்சித்தாலும் "நான் எனது திட்டப்படி வேலை செய்கிறேன்" என்றும் ஜனாதிபதி  தெரிவித்தார்.

"மக்கள் மத்தியில் சென்று பணியாற்றியே நான் ஜனாதிபதியானேன். மக்கள் பணியின் மூலமே மக்கள் தலைவராக முடியும்” எனவே மக்கள் மத்தியில் சென்று பணியாற்றுமாறு ஜனாதிபதி இளம் மக்கள் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தினார்.

இன்று (06) முற்பகல் கேகாலை மாவட்டத்தில் உள்ள தெரணியகல பிரதேச செயலக பிரிவில் உள்ள திக்கெல்லகந்த கிராம சேவகர் பிரிவில் உள்ள திக்கெல்லகந்த கணிஷ்ட வித்தியாலய வளாகத்தில் நடைபெற்ற ஒன்பதாவது “கிராமத்துடன் உரையாடல்“ நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே ஜனாதிபதி இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட்ட முடிவுகளை சாட்டாக வைத்துக் கொண்டு எந்தவொரு தனி நபரோ அல்லது குழுவோ சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.

பாரம்பரியமாக பயிர் செய்த நிலங்களில் பயிர் செய்யும் உரிமையை விவசாயிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. இதைப் பயன்படுத்தி சுற்றுச் சூழலுக்கும் வனத்துறைக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் சிலர் செயற்படுவதாக தெரிய வந்துள்ளது என்று ஜனாதிபதி தெரிவித்தார். 

இயற்கையின் சக்தியை மனிதனின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்த வேண்டும். பொருளாதாரத்தை வலுப்படுத்தாமல் தேசியத்தை பாதுகாக்க முடியாது என்றும், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் ஜனாதிபதி கூறினார்.

“கிராமத்துடன் உரையாடல்” திட்டம் 2020 செப்டம்பர் 25 அன்று பதுளை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. மாத்தளை, இரத்தினபுரி, அனுராதபுரம், அம்பாறை, பொலன்னறுவை, களுத்துறை மற்றும் மொனராகலை மாவட்டங்களை உள்ளடக்கி கடந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதுவரை சரியான கவனம் செலுத்தப்படாத நகரத்திற்கு வெளியே உள்ள தொலைதூர கிராமங்களைச் சேர்ந்த மக்களை சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளை விசாரித்து, அச்சந்தர்ப்பத்திலேயே அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்து தீர்வுகளை வழங்குவதே ஜனாதிபதியின் நோக்கமாகும். 

தீர்ப்பதற்கு காலம் செல்லும் பிரச்சினைகள் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படுவதற்காக குறித்துக் கொள்ளப்படும். கிராம மக்களிடம் சென்று, அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, அவர்களின் முன்மொழிவுகளில் இருந்து தீர்வுகளைக் காண்பதும் இந்த திட்டத்தின் நோக்கம்.

தெரணியகலை நகரத்திலிருந்து சுமார் 23 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள திக்கெல்லகந்த சிவனொளிபாத பாதுகாக்கப்பட்ட வன எல்லையில் உள்ளது. 

அஸ்கல, பல்லஹேன, நாமல்வத்த மற்றும் ஊரவனாவ ஆகிய கிராமங்கள் திக்கெல்லகந்த கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்டவையாகும். 

208 குடும்பங்களைக் கொண்ட இந்த கிராமங்களின் மக்கள் தொகை 718 ஆகும். மாலிபொட, பொத்தெனிய மற்றும் மாகல ஆகிய கிராமங்கள் திக்கெல்ல கிராமத்தைச் சுற்றியுள்ள ஏனைய கிராமங்களாகும்.

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுச் சூழல் வலயத்தில் அமைந்துள்ள இந்த கிராமங்களில் உள்ள பலர் தேயிலை செய்கை அல்லது அதனுடன் தொடர்புடைய தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். கராம்பு, ஏலக்காய் மற்றும் மிளகு ஆகியவை ஏனைய பயிர்களாகும். கிதுல் தொழிலில் 25 குடும்பங்கள் ஈடுபட்டுள்ளன.

வீதி மற்றும் பாலங்கள் அபிவிருத்தி செய்யப்படாததாலும், பொதுப் போக்கு வரத்து சேவைகள் பலவீனமடைந்திருப்பதாலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்

வருகை தந்திருந்த மக்கள் தாங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை ஜனாதிபதிக்கு விளக்கினர். வீதி சிரமங்கள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு பதிலளித்த ஜனாதிபதி, பொத்தெனிகந்தவிலிருந்து திக்வெல்லகந்த வரையான வீதி நிர்மாணப் பணிகளை நாளைய தினமே (07) ஆரம்பித்து விரைவாக நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மாலிபொடயிலிருந்து சிவனொளிபாத வீதியில் பன்தெனிய வரையிலும், தெரணியகலயிலிருந்து நூரிய உடமாலிபொட முதல் திக்கெல்லகந்த வரையிலும், மாலிபொடயிலிருந்து ஊரவனாவ அம்பகககந்த வரையிலுமாக பல வீதிகளின் அபிவிருத்திப் பணிகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

நாடு முழுவதும் கிராமப்புற தோட்டங்களை அண்மித்த சிறிய உள்நுழைவு வீதிகள் மற்றும் சிறிய வீதிகளை இணைக்கும் வகையில் அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இப்பகுதியில் உள்ள அனைத்து பாலங்கள் குறித்தும் முறையாக கண்காணித்து அபிவிருத்தி செய்யவும் முடிவு செய்யப்பட்டது. அபிவிருத்திச் செயற்பாட்டில் ஒப்பந்தக்காரர்கள் உரிய முறையில் செயற்படாவிட்டால், அவர்களை விடுத்து பொருத்தமான நிறுவனங்களிடம் அவற்றை ஒப்படைக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

இனிமேல், அனைத்து நிர்மாணப் பணிகளும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் மேற்பார்வையில் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கூறினார்.

குடிநீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், பொல்கஸ்வத்த, பஸ்நாகல - ஹொரகஹஹின்ன நீர் திட்டங்களை விரைவுபடுத்தவும் மாவட்டத்தில் உள்ள நீர் மூலங்களை அடையாளம் கண்டு குடிநீர் தேவைகளை வழங்கவும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

மாலிபொட நகரத்தை முறையான விதத்தில் அபிவிருத்தி செய்யுமாறு நகர அபிவிருத்தி அமைச்சுக்கும், புதிய வீட்டுத் திட்டத்தை விரைவுபடுத்துமாறு தோட்ட வீடமைப்பு, உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சுக்கும் பணிப்புரை வழங்கப்பட்டது.

திக்கெல்லகந்த கணிஷ்ட வித்தியாலயத்திற்கு புதிய கட்டிடமொன்றை வழங்கவும் ஆய்வுகூட வசதிகள் மற்றும் விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்யவும் முடிவு செய்யப்பட்டது. ஆசிரியர்களின் போக்கு வரத்துக்கு முச்சக்கர வண்டியொன்றை வழங்கவும் ஜனாதிபதி முடிவு செய்தார். பொத்தெனிகந்த வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி வேலைகள் நாளை முதல் ஆரம்பமாகும். 

விளையாட்டு மற்றும் பேண்ட் வாத்திய கருவிகள் இல்லாத அனைத்து பாடசாலைகளுக்கும் அவற்றை வழங்குமாறு ஜனாதிபதி கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அனைத்து பாடசாலைகளின் கணினி தேவைகளையும் ஆராய்ந்து பூர்த்தி செய்யுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் ஆசிரியர்கள் பற்றாக்குறையை நீக்குவதற்கும், ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி கூறினார். 

தமிழ் மொழி மூல பாடசாலைகளில் உள்ள ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் வெற்றிடங்களுக்கு க.பொ.த. உயர்தர பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

கோகாலை மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ மற்றும் ஏனைய ஊழியர்களின் வெற்றிடங்களை நிரப்பவும், உட்கட்டமைப்பை மேம்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. இப்பகுதியில் காணிப் பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தினார்.

எஸ்.எல்.டி மொபிடல் நிறுவனம் நன்கொடையளித்த கணினிகள் மற்றும் டயலொக் நிறுவனம் நன்கொடை அளித்த தொலைக்காட்சிகள் மற்றும் இணைப்புகள் திக்கெல்லகந்த கணிஷ்ட வித்தியாலயம், மாலிபொட தமிழ் வித்தியாலயம், உடுமாலிபொட ஸ்ரீ தேவானந்த வித்தியாலயம் ஆகியவற்றின் அதிபர்களிடம் ஜனாதிபதி வழங்கிவைத்தார்.

சபரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, வட மத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத், இராஜாங்க அமைச்சர்கள் கனக ஹேரத், தாரக பாலசூரிய, பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டிய, சுதத் மஞ்சுல, சாரதி துஷ்மந்த, ராஜிகா விக்ரமசிங்க, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதிகள், அமைச்சுக்களின் செயலாளர்கள், அரசாங்க நிறுவனங்கள், பாதுகாப்பு துறை முக்கியஸ்தர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment