கினியாவில் எபோலா வைரஸ் தொற்று - நால்வர் பலி, ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதி - News View

About Us

About Us

Breaking

Monday, February 15, 2021

கினியாவில் எபோலா வைரஸ் தொற்று - நால்வர் பலி, ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதி

கொரோனா தொற்றை எதிர்த்து போராடும் கினியா நாட்டில் எபோலா வைரஸ் தொற்றினால் நான்கு பேர் உயிரிழந்துள்ளதோடு, ஐந்து பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் இரத்தப்போக்கு காரணமாக நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொற்றுக்குள்ளானவர்கள் சிகிச்சை மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அநநாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பெப்ரவரி 1 ஆம் திகதி உயிரிழந்து அடக்கம் செய்யப்பட்ட நபர் உள்ளூர் சுகாதார நிலையத்தில் தாதி ஒருவராவார். லைபீரியா மற்றும் ஐவரி கோஸ்ட்டின் எல்லைக்கு அருகிலுள்ள ந்செர்கோர் என்ற நகரத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

“அந்த நல்லடக்க நிகழ்வில் பங்கேற்ற எட்டுப் பேரிடம் வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் இரத்தப்போக்கு ஆகிய நோய் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. இவர்களில் மூவர் உயிரிழந்திருப்பதோடு ஐவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் மீண்டும் எபோலாவை எதிர்த்துப் போராடுவது கினியாவில் சுகாதார சேவைகளில் பாரிய அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 12 மில்லியன் மக்கள் வாழும் கினியாவில் இதுவரை 14,895 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 84 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

எபோலா வைரஸ் கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்துகிறது மற்றும் உடல் திரவங்களுடனான தொடர்பு மூலம் பரவுகிறது. இது கொரோனாவை விட மிக அதிகமான இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது, ஆனால் கொரோனா வைரஸைப் போலல்லாமல் இது அறிகுறியற்ற நோயாளர்களால் பரவுவதில்லை.

சுகாதார ஊழியர்கள் எபோலா நோயாளர்களின் தொடர்புகளைக் கண்டறிந்து தனிமைப்படுத்த முயற்சிப்பதாகவும், ஒரு சிகிச்சை மையத்தைத் திறப்பதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், எபோலா தடுப்பூசிகளை உலக சுகாதார ஸ்தாபனத்திடம் (WHO) அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

2013 முதல் 2016 ஆம் ஆண்டில் உலகில் மோசமான பாதிப்பை ஏற்படுத்திய எபோலா வைரஸ் தொற்று மீண்டும் பரவியுள்ளது.

லைபீரியா, கினியா மற்றும் சியாரா லியோனில் 2013 - 2016 வரை பரவிய எபோலா வைரஸ் தொற்றால் 11,300 பேர் உயிரிழந்துள்ளனர்.

2019 ஆம் ஆண்டு ஓகஸ்டில் மீண்டும் ஏற்பட்ட எபோலா தொற்றால், மத்திய ஆப்பிரிக்காவில் 1,800 பேர் உயிரிழந்துள்ளனர்.

எபோலா வைரஸ், மனிதக்குரங்குகள், பழந்தின்னி வௌவால்கள் போன்ற விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கும், ஒரு மனிதரிடம் இருந்து மற்றொருவருக்கும் வேகமாக பரவக்கூடியது.

No comments:

Post a Comment