ஜெயலலிதாவின் சமாதியில் எடுத்துக் கொண்ட சபதம் - சசிகலா தேர்தலில் போட்டியிட தடையை நீக்க வழக்கறிஞர்களுடன் ஆலோசனை - News View

Breaking

Post Top Ad

Friday, February 5, 2021

ஜெயலலிதாவின் சமாதியில் எடுத்துக் கொண்ட சபதம் - சசிகலா தேர்தலில் போட்டியிட தடையை நீக்க வழக்கறிஞர்களுடன் ஆலோசனை

சசிகலா எதிர்வரும் 2027ஆம் ஆண்டு வரை தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட தடையை நீக்க சட்ட ரீதியில் வழிகள் இருக்கின்றனவா என்று தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து விட்டு தற்போது விடுதலையாகி விட்டார்.

எதிர்வரும் 7-ஆம் திகதி சசிகலா சென்னைக்கு வரவிருக்கிறார். முன்னதாக அ.தி.மு.க கொடி பொருத்தப்பட்ட காரில் சிறைக்குச் சென்ற சசிகலா அதே கொடி பொருத்தப்பட்ட காரில்தான் வெளியே வர வேண்டும் என விரும்பி வழக்கறிஞர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை சட்ட ரீதியில் இந்த நிலையில் சசிகலாதான் அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் என்ற கருத்தை டி.டி.வி தினகரன் முன்வைக்கிறார். இதனால் பெப்ரவரி 7ஆம் திகதி அ.தி.மு.கவில் ஒரு பிரளயம் ஏற்படும் என்றே தெரிகிறது. 

மேலும் அவர் இரட்டை இலை சின்னத்தையும் தான் பொதுச் செயலாளர் என்ற முறையில் சட்ட ரீதியில் பெறுவார் என தெரிகிறது. இதனால் சட்ட சபைத் தேர்தலில் அவர் போட்டியிட முயலக் கூடும் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். 

அதாவது ஊழல் வழக்கில் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை பெற்ற குற்றவாளிகள் விடுதலை ஆன நாளில் இருந்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி தண்டனை அனுபவிக்கத் தொடங்கிய நாளில் இருந்து சசிகலா 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது.

இந்த 10 ஆண்டுகளில் 4 ஆண்டுகள் சிறையில் கழித்து விட்டார் சசிகலா. மீதமுள்ள 6 ஆண்டுகளுக்கு சசிகலா தேர்தலில் போட்டியிட முடியாது என்பது விதியாகும். 

ஆனால் சிக்கிம் மாநில அமைச்சர் பிரேம்சிங் தமாங் ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் இருந்தார். பின்னர் தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையத்தில் அவர் மனு அளித்தார். அதை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம் அவருக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான தடையை நீக்கியது. இதையடுத்து போட்டியிட்டார், பின்னர் முதலமைச்சரானார்.

இதுபோன்று சசிகலாவுக்கும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெற ஏதேனும் வழிகள் இருக்கின்றனவா என தேடி வருகிறார்களாம். இது தொடர்பாக சசிகலாவும் 'வீடியோ கோல்' மூலம் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் கடந்த 2017ஆம் ஆண்டு கைநழுவிப் போன முதல்வர் அரியணை வாய்ப்பை அவர் தற்போது அடைய நினைப்பார் என கூறுகிறார்கள். 

மேலும் மக்களிடம் தனக்கு இருக்கும் செல்வாக்கை தெரிந்து கொள்ள ஆழம் பார்க்கவும் சசிகலா திட்டமிட்டு தேர்தலில் போட்டியிட விரும்பலாம் என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

நீட் தேர்வு, 8 வழிச்சாலை திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட திட்டங்களால் அ.தி.மு.க அரசின் மீது மக்களுக்கு உள்ள அதிருப்தியை தனக்கு சாதகமாக மாற்றவும் சசிகலா முயற்சிக்கலாம் என்கிறார்கள்.

சிறைக்குச் செல்வதற்கு முன்னர் சசிகலா முதல்வராவதற்கான அனைத்துப் பணிகளும் நடைபெற்றன. அப்போது சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதனால் அவரது முதல்வர் கனவு சுக்குநூறாக நொறுங்கியது. 

சிறைக்கு செல்வதற்கு முன்னர் ஜெயலலிதா சமாதியில் சபதம் ஏற்றார். சிறையிலிருந்து வந்து நிச்சயம் முதல்வராவேன் என சமாதியில் அடித்து சத்தியம் செய்திருக்கலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad