"பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அரசியல் நாடகமே நடைபெறுகின்றது" - வேலுகுமார் எம்.பி. - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 17, 2021

"பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அரசியல் நாடகமே நடைபெறுகின்றது" - வேலுகுமார் எம்.பி.

"பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அரசியல் நாடகமே நடைபெறுகின்றது. தொழிலாளருக்கு நியாயமான கூலியை பெற்றுக் கொடுப்பதில் எவருக்கும் அக்கறை இல்லை."என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் பின்வருமாறு தெரிவித்தார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் கூலி விடயம் இன்று இழுபறி நிலையை அடைந்துள்ளது. இவ்விடயத்தில் ஒவ்வொரு சாராரும் ஒவ்வொரு திசையில் செயற்படுகின்றனர்.

பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தொழிற்சங்கங்களுக்கு தங்களை தக்கவைத்துக் கொள்ள வேண்டும். "பேசுவது நாம்தான், கூலி நிர்ணய சபையில் இருப்பதும் நாம் தான், பெற்றுக் கொடுத்ததும் நாம் தான்" என்பதன் மூலம் தங்களது தொழிற்சங்க, அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வது அவர்களது முன்னுரிமை தேவையாக உள்ளது.

அரசின் முன்னுரிமை, கம்பனிகளை திருப்த்தி படுத்துவதிலேயே உள்ளது. கம்பனி காரர்கள், தொழிசாங்கத்தின் பலவீனம் மற்றும் அரசினால் மறைமுகமாக வழங்கப்படும் ஒத்துழைப்பை சாதகமாக்கிக் கொண்டு தங்களது கரங்களை பலப்படுத்துகின்றனர். தொடர்ந்தும் தங்களது பிடியில் தொழிலாளர்களை அடக்கி வைத்துக் கொள்வதிலேயே அவர்கள் அக்கறை காட்டுகின்றனர். 

ஆக மொத்தத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அரசியல் நாடகமே நடைபெறுகின்றது. தொழிலாளருக்கு நியாயமான கூலியை பெற்றுக் கொடுக்கும் அக்கறை எத்தரப்பிற்கும் இல்லை.

"கூட்டு ஒப்பந்தமா? கூலி நிர்ணய சபையா? இறுதி கூலித் தொகை என்ன?" என்பதில் இழுபறி நிலை தொடர்ந்தால் தொழிலாளர்கள் பாரிய நெருக்கடியை எதிர்நோக்க வேண்டி ஏற்படும். எனவே காலம் தாழ்த்தாது முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

சுயலாப தொழிற்சங்க, அரசியல் வாதங்களை முன்னிலைப்படுத்துவதை அனைத்து தரப்பினரும் கைவிட வேண்டும். அனைத்து பெருந்தோட்ட துறையை மையப்படுத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் சக்திகள் ஒன்றிணைய வேண்டும். அவர்களுக்குள் உள்ள ஏட்டிக்கு போட்டியான நிலையை கைவிட வேண்டும். 

இவ் இழுபறி நிலைக்கு பொது உடன்பாடொன்றின் மூலம் தீர்வு காணப்பட வேண்டும். மாறாக நாம், ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொள்ளலாம். ஆனால், இறுதியில் முழு பாதிப்பும் அப்பாவி தொழிலாளர்கள் மீதே சுமத்தப்படும்.

No comments:

Post a Comment