எங்களுடைய ஜனநாயக உரிமையை தடுப்பதற்கு எந்த சட்டத்திலும் இடமில்லை. இருந்த போதும் ஜனநாயக ரீதியாக அகிம்சை வழியில் எவருக்கும் பாதகமில்லாமல் வீதியில் நடக்கின்ற போது அதற்கு எதிராக அரச இயந்திரம் பொலிசார் ஊடாக தடை உத்தரவு பெறுகின்றது. இதனை வன்மையாக கண்டிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
தமிழ் இன அழிப்புக்கு எதிராக் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான எழுச்சி பேரணி வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று (03) பொத்துவில் ஆரம்பித்து மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் முடிவடைந்தது. இதில் பற்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றை காரணமாக காட்டியும் சமூகங்களுக்கிடையே முறுகல்கள் ஏற்படும் என பொய்யாக சொல்லி அவர்கள் சில நீதிமன்ற தடை உத்தரவை பெற எத்தனிக்கின்றனர்.
இன்றைக்கு கொரோனா தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டது மேல் மாகாணம். அப்படி இருக்கத்தக்கதாக கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு முனையம் தொடர்பாக சில நாட்களாக பெரியதொரு ஆர்ப்பாட்டம் நடந்திருக்கின்றது. அதிலேபோய் கொரோனா வைரஸ் தொற்றைப்பற்றி எவரும் கவலைப்படவில்லை.
அரசாங்கமே முன்றின்று தொழிற்சங்கங்களை ஏவிவிட்டு கிழக்கு முனையை இந்தியாவுக்கு கொடுப்பதை தடுக்கின்ற செயலை செய்யும் போது கொரோனா வைரஸ் பற்றி எவரும் கவலைப்படவில்லை எந்த பொலிசாரும் எந்த நீதிமன்றத்தையும் நாடவில்லை.
ஆனால் எங்கள் அடிப்படை உரிமைகளை நாங்கள் பெற வேண்டும் என ஜனநாயக ரீதியாக அகிம்சை வழியில் எவருக்கும் பாதகமில்லாமல் வீதியில் நடக்கின்றபோது அதற்கு எதிராக அரச இயந்திரம் பொலிசார் ஊடாக தடை உத்தரவு பெறுகின்றது இதனை வன்மையாக கண்டிக்கின்றோம்.
யாழ்ப்பாணத்திலும் நீதிமன்றங்களில் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளதாக அறிகின்றோம். எந்தெந்த எல்லைக்குள் நீதிமன்ற தடை உத்தரவு பெறப்படுகின்றதோ அதை அவருக்கு கொடுக்கப்பட்டால் நீதிமன்ற உத்தரவை மதிப்போம் அதை மீற மாட்டோம்.
தமிழ் பேசும் மக்களாக ஒன்றாக திரண்டு இன்று ஆரம்பம் முதல் நாள் மட்டும் தான் இது பெரும் திரட்சியாக வடக்கை நோக்கி போகும் போது எவராலும் அதை தடுக்க முடியாது.
அதேவேளை விசேடமாக சர்வதேசம் எங்களை திரும்பி பார்க்க வேண்டும் அவர்களை திரும்பி பார்க்க வைக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கின்றது என்பதுடன் என்றுமே இல்லாதவாறு ஊடகவியலாளர்களுக்கு எதிராக தடைகளை எடுக்க அரசாங்கம் முனைகின்றது. இது மிகவும் கண்டனத்துக்குரியது.
ஆகவே நாங்கள் முன் வைத்திருக்கின்ற எங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து நாளையும் இதே இடத்தில் இருந்து பேரணியை தொடருவோம் அனைவருடைய ஆதரவும் எங்களுக்கு தேவை என்றார்.
மட்டக்களப்பு நிருபர் சரவணன்
No comments:
Post a Comment