(இராஜதுரை ஹஷான்)
பாடசாலை மட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு குழு அமைக்கவுள்ளமை பாதுகாப்பான சூழலை உருவாக்க எடுத்துள்ள சிறந்த தீர்மானமாகும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
மாஹகரம பகுதியில் இடம்பெற்ற பொதுமக்கள் பாதுகாப்பு குழுவின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இதற்காகவே பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான அமைச்சு பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அச்சமின்றி பாதுகாப்பான முறையில் வாழும் சூழலை ஏற்படுத்துவது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் பிரதான இலக்காகும்.
தேசிய பாதுகாப்பில் நாட்டு மக்கள் அனைவரும் பங்குப்பற்ற வேண்டும் என்பதற்காகவே 18 வயதுக்கு மேற்பட்ட இருபாலாருக்கும் இராணுவ பயிற்சியை வழங்க வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தேன்.
நாடளாவிய ரீதியில் 44 தொகுதிளில் பொதுமக்கள் பாதுகாப்பு குழு சேவையாற்றும். 117, 118 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து பொதுமக்கள் தங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.
போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளவர்களை சிறையிலடைப்பதால் அவர்கள் திருந்தி விட மாட்டார்கள். சிறைக் காலம் முடிவடைந்த பின்னர் மீண்டும் சமூக விரோத செயற்பாடுகளின் ஈடுபடுவார்கள்.
போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளவர்கள் 35,000 பேர் தற்போதும் சிறைச்சாலைகளில் உள்ளார்கள்.
போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளவர்களை சிறையிலடைக்காமல் இரண்டு வருட காலத்துக்கு கட்டாய புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment