மட். உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில் தேசிய ஆங்கில உயர் டிப்ளோமா தகைமை பெற்ற மாணவன் ஒருவர் தன்னை பரீட்சை எழுத அனுமதிக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநரிடம் மனு செய்துள்ளார்.
கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு மாகாணத்தில் ஆங்கில பாட ஆசிரியர்களுக்கு வெற்றிடம் நிலவும் பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை நியமிப்பதற்கு போட்டிப் பரீட்சைக்காக விண்ணப்பம் கோரியிருந்தது.
விண்ணப்ப முடிவுத் திகதிக்கு முன்பாக குறித்த டிப்ளோமாச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்பதும் விண்ணப்பத்துடன் பட்டச்சான்றிதழை இணைக்க வேண்டும் என்பதும் நிபந்தனை.
அதன்படி விண்ணப்ப முடிவுத் திகதி 2020.10.08ஆகும். குறித்த மாணவன் தனது டிப்ளோமாவை 2020.09.21ஆம் திகதி பூர்த்தி செய்துள்ளான்.
ஆனால் கொவிட் காரணமாக அவரது சான்றிதழ் கொழும்பிலிருந்து வர சற்று தாமதமாகிவிட்டது. அதனைக் காரணமாக வைத்து சான்றிதழ் பிந்திவிட்டதால் பரீட்சைக்கான அனுமதி அட்டை அனுப்பப்படவில்லை. இதனால் அம்மாணவன் உள ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளான்.
சான்றிதழ் பிந்தியமைக்கு குறித்த மாணவன் காரணமல்ல. மேலும் நாட்டில் கொவிட் காரணமாக எத்தனையோ சலுகைகள் வழங்கப்பட்டு கொண்டு வருகின்ற இக்காலகட்டத்தில், பட்டம் பெற்ற ஒரு மாணவனுக்கு நியமனம் அல்ல பரீட்சை எழுதுவதற்குக்கூட அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறதா என்பது கவலைக்குரியது.
குறித்த பரீட்சை எதிர்வரும் 27ஆம் திகதி சனிக்கிழமை கிழக்கில் நடைபெறவுள்ளது. சுமார் 500 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் 150 பேர் தெரிவு செய்யப்படவுள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில் காரைதீவைச் சேர்ந்த இந்த மாணவன் விண்ணப்ப முடிவுத் திகதிக்கு முன்பு தனது பட்டத்தை பூர்த்தி செய்திருந்தும் பரீட்சை எழுத அனுமதி கிடைக்காமை கவலையளித்துள்ளது.
(காரைதீவு குறூப் நிருபர்)
No comments:
Post a Comment