முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகளுக்கு இலங்கை மதிப்பளிக்க வேண்டியது அவசியம் : ஜெனிவாவில் வலியுறுத்தியது இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 24, 2021

முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகளுக்கு இலங்கை மதிப்பளிக்க வேண்டியது அவசியம் : ஜெனிவாவில் வலியுறுத்தியது இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கான முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைக்கு இலங்கை அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டியது அவசியமாகும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில், நேற்று செவ்வாய்கிழமை அமர்வில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர் நாயகம் யூசுப் அல் ஒதைமீன் உரையாற்றினார்.

அதன்போது இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்காத நாடுகளில் முஸ்லிம் சமூகத்தின் நிலை எவ்வாறானதாக இருக்கின்றது என்பது குறித்து தமது அமைப்பு கண்காணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அத்தோடு உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்களின் பிரகாரம் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தினருக்கு அந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அவதானம் செலுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சடலங்களை அடக்கம் செய்வதற்கான முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைக்கு மதிப்பளித்து, அதனை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் யூசுப் அல் ஒதைமீன் வலியுறுத்தியுள்ளார்.

மத ரீதியான சுதந்திரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், மத ரீதியான அடக்கு முறைகள், பின்தள்ளுதல், சகிப்புத்தன்மை இன்மை ஆகியவற்றுக்கு எதிராக சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார். 

மதத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு நபரின் மீதோ அல்லது ஒரு சமூகத்தின் மீதோ வன்முறைகள் பிரயோகிக்கப்படுவதற்கு எதிராக முன்னெடுக்கப்பட வேண்டிய போராட்டம் தொடர்பிலும் இதன்போது அவர் கருத்து வெளியிட்டார்.

அதேவேளை அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதம் போன்றவற்றை ஒழித்து அமைதியையும் பாதுகாப்பையும் நிலைநாட்டுவதற்கு பிராந்திய மற்றும் சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment