போர்க் குற்றங்கள் என்ற பெயரில் அரசாங்கத்தை அச்சுறுத்தும் நகர்வுகளை கருத்தில் கொள்ளப்போவதில்லை - அமைச்சரவை பேச்சாளர் உதய கம்மன்பில - News View

About Us

About Us

Breaking

Monday, February 8, 2021

போர்க் குற்றங்கள் என்ற பெயரில் அரசாங்கத்தை அச்சுறுத்தும் நகர்வுகளை கருத்தில் கொள்ளப்போவதில்லை - அமைச்சரவை பேச்சாளர் உதய கம்மன்பில

(ஆர்.யசி)

போர்க் குற்றங்கள் என்ற பெயரில் அரசாங்கத்தை தொடர்ச்சியாக அச்சுறுத்தும் நோக்கத்திலேயே ஜெனிவா நகர்வுகள் இடம்பெற்று வருகின்றது. ஆனால் இவற்றை அரசாங்கம் கருத்தில் கொள்ளப்போவதில்லை. தற்போது வடக்கு கிழக்கில் இடம்பெற்ற பேரணியும் அரசாங்கத்தை சர்வதேச மட்டத்தில் நெருக்கடிக்குள் தள்ளும் முயற்சியென அரசாங்கம் கூறுகின்றது.

இராணுவத்திற்கு எதிராக எவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும் அவற்றை முழுமையாக நிராகரிப்போம் எனவும், ஜெனிவா பிரேரணையை முற்றாக நிராகரிப்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு எனவும் அமைச்சரவை இணை பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான கடுமையான நகர்வுகள் இடம்பெறவுள்ளதாக விமர்சிக்கப்பட்டு வருகின்ற நிலையில் வடக்கு கிழக்கு தமிழர் எழுச்சி பேரணி விடயங்கள் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை முன்வைக்கையிலேயே அமைச்சர்களான உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் இதனை கூறினார். 

இது குறித்து அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில கூறுகையில், நாட்டின் ஆட்சியை இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துவிட்டதாகவே மனித உரிமைகள் ஆணையாளர் உள்ளிட்ட மனித உரிமை பேரவை உறுப்பினர்கள் குற்றம் சுமத்துகின்றனர். 

அரசாங்கத்தின் ஒருசில துறைகளுக்கு இராணுவ அதிகாரிகளை நியமித்துள்ளமையே இவர்களின் பிரச்சினையாக உள்ளது. ஆனால் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளை சிவில் செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதும், தகுதியான இராணுவத்தை உரிய துறைகளில் ஈடுபடுத்தி பிரச்சினைகளை தீர்ப்பது என்பன எந்த விதத்திலும் தவறான நகர்வு அல்ல. 

அதேபோல் இராணுவ தளபதி சவேந்திர சில்வா போர் குற்றவாளி என கூறுவதையும் எங்கேயும் இதுவரை நிரூபிக்கவில்லை. மனித உரிமைகள் ஆணையாளர் உள்ளிட்ட பலர் விடுதலைப் புலிகளை பலப்படுத்தி அவர்களின் கையாளாக செயற்படுவதை அவர்களின் இந்த நடவடிக்கைகள் மூலமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.

எவ்வாறு இருப்பினும் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. எழுத்து மூலம் இந்த அறிவிப்பை அனுப்பியுள்ளோம். எந்தவொரு இடத்திலும் ஆணையாளரின் அறிக்கையை அரசாங்கம் ஆதரிப்பதாக கூறுவதற்கு நாம் தயாராக இல்லை. 

அதேபோல் வடக்கு கிழக்கில் தற்போது இடம்பெற்று முடிந்துள்ள பேரணிகூட மக்களை ஏமாற்றும் நடவடிக்கையேயாகும். புலம்பெயர் புலி அமைப்புகளின் பணத்தினை பெற்றுக் கொள்ளும் வேலைத்திட்டங்களை சுமந்திரன் போன்றவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இந்த ஏமாற்று நாடகங்கள் கூட சர்வதேச அரங்கில் அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளும் சூழ்ச்சி என்பது தெளிவாக விளங்குகின்றது என்றார்.

No comments:

Post a Comment