இலங்கை தொடர்பில் விரிவாக ஆராயப்பட வேண்டும் : சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் - News View

Breaking

Post Top Ad

Thursday, February 11, 2021

இலங்கை தொடர்பில் விரிவாக ஆராயப்பட வேண்டும் : சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம்

(நா.தனுஜா)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரின் போது இலங்கையில் இடம்பெற்ற திட்டமிட்ட குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், வலிந்து காணாமலாக்கப்படல், வலுவிழந்துள்ள சட்டத்தின் ஆட்சி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட வேண்டும் என சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் வலியுறுத்தியிருக்கிறது.

எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் விவாதிக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பான அறிக்கையினை இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்புடன் இணைந்து சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் வெளியிட்டிருக்கிறது.

திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் அவை தொடர்பில் விசாரணை செய்வதில் தோல்வியடைந்த கட்டமைப்புக்கள், தற்போது இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் (வன்முறைகள், தன்னிச்சையான கைது நடவடிக்கைகள், தடுத்துவைக்கப்பட்டுள்ள போது இடம்பெறும் இறப்புக்கள்), வலிந்து காணாமலாக்கப்படல், கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்கள் மற்றும் சட்டத்தின் ஆட்சி, முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் ஆகிய விடயங்கள் தொடர்பில் மேற்படி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரினால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பாரிய மனித உரிமை மீறல் குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதற்கான 30/1 தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் கடப்பாட்டிலிருந்து இலங்கை அரசாங்கம் தவறியுள்ளமை தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சர்வதேச சட்டங்களுக்கு முரணான குற்றங்கள் தொடர்பில் நீதியையும் பொறுப்புக் கூறலையும் உறுதி செய்யாமை மாத்திரமன்றி, சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்றமை குறித்தும் கூறப்பட்டுள்ளது என்று மேற்படி இரு அமைப்புக்களும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad