இந்தியாவின் ஆதரவை இலங்கை அரசு பெறவே வடக்கில் மூன்று தீவுகள் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது - சி.வி.விக்னேஸ்வரன் - News View

About Us

About Us

Breaking

Sunday, February 14, 2021

இந்தியாவின் ஆதரவை இலங்கை அரசு பெறவே வடக்கில் மூன்று தீவுகள் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது - சி.வி.விக்னேஸ்வரன்

ஜெனிவாவில் இந்தியாவின் ஆதரவை இலங்கை அரசு பெறுவதற்காகவே வடக்கு மாகாணத்தில் மூன்று தீவுகள் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் மூன்று தீவுகள் சீன கம்பெனி ஒன்றுக்கு மின் சக்தி உற்பத்திக்கு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சி.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் அண்மையில் ஒரேநாளில் இரு வேறு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஒரே நாளில் அரசானது இரண்டு வேறுபட்ட தீர்மானங்களை எடுத்துள்ளது கிழக்கு முனையத்தினை இந்தியாவிற்கு கொடுக்க முடியாது என அறிவித்துள்ளது.

அதேபோல வடக்கு மாகாணத்தில் உள்ள மூன்று தீவுகளில் நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய மூன்றையும் சீன கம்பனிக்கு மின் சக்தி தயாரிப்பதற்காக கொடுப்பதாகச் சொல்லி இருக்கின்றார்கள் இது மிகவும் பாரதூரமான விடயமாகும். முதலாவது இந்தியாவுக்கு கிழக்கு முனையத்தினை கொடுக்காமை சம்பந்தமாக இந்தியா பார்த்துக் கொள்ளும்.

ஆனால் வடக்கு மாகாணத்தில் உள்ள மூன்று தீவுகளை கொடுப்பது என்பது எமது வட மாகாண பாதுகாப்பிற்கு மிகவும் பாரதூரமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது எனது கருத்து.

தற்போதைய அரசானது இந்தியாவிற்கு எதிராக செயற்பட்டு இந்தியாவை கோபப்படுத்துவதற்காக செயற்படுகின்றார்கள். 13 ஆவது திருத்தச் சட்டத்தின்படி எமது பகுதி காணிகளை ஜனாதிபதி வழங்குவதாக இருந்தால் கூட அது மாகாண சபையின் ஊடாக செய்யப்பட வேண்டும் என்று இருக்கின்றது. எனினும் மாகாண சபையுடன் எந்தவித ஆலோசனையும் நடத்தாமல் அதற்கு பதிலாக ஆளுநரின் ஊடாக அதற்குரிய அனுமதியைப் பெற்று செய்வது மிகவும் சட்டத்திற்கு முரணானது.

எமது தமிழ் பிரதிநிதிகளும் இது தொடர்பில் தமது தீர்மானத்தை தெரிவிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. எதிர்காலத்தில் எமது சந்ததியினருக்கு இதனால் பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய நிலை காணப்படுகின்றது.

இந்தியாவில் இருந்து 49 கிலோ மீற்றர் தூரத்திலே உள்ள தீவுகளை இவ்வாறு வேறு ஒரு நாட்டுக்கு கொடுப்பது என்பது பாரதூரமான விடயமாகும். அதேபோல் இலங்கை அரசானது இதனை தெரியாமல் செய்யவில்லை தெரிந்துகொண்டுதான் செய்கின்றது.

அதாவது ஜெனிவாவில் இந்தியாவினுடைய ஆதரவை தாங்கள் பெறுவதற்காக, இவற்றை நிறுத்துவதாக இருந்தால் நீங்கள் எங்களுக்கு ஜெனிவாவில் நன்மைகள் பெற்று தர வேண்டும் என்ற அடிப்படையிலும் இவற்றை செய்கின்றார்கள் என்பது எமக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment