காத்தான்குடி பொலிஸ் பிரிவில் காணாமல் போன இளைஞன் இரண்டு தினங்களின் பின் சடலமாக மீட்பு - News View

Breaking

Post Top Ad

Saturday, February 6, 2021

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் காணாமல் போன இளைஞன் இரண்டு தினங்களின் பின் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி முதலாம் குறிச்சியில் கடந்த வியாழக்கிழமையன்று (4) வாவியில் வீழ்ந்து காணாமல் போன இளைஞன் இன்று (06) முற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் ஹிஸ்புல்லாஹ் வீதியைச் சேர்ந்த மீராமுகைதீன் முனாஸ் எனும் 20 வயது இளைஞரே இவ்வாறு வாவியில் விழுந்து காணாமல் போயிருந்தார்.

குறித்த இளைஞன் வாவியில் நிறுத்தப்பட்டிருந்த ஆழ்கடல் மீன்பிடி படகில் காணப்பட்ட வலையை ஒழுங்கு செய்வதற்காக சிறிய தோணி ஒன்றில் படகை நோக்கி சென்று கொண்டிருந்த போது தவறி வீழ்ந்து காணாமல் போயிருந்தார்.

குறித்த இளைஞனை தேடும் பணி இடம்பெற்று வந்த நிலையில் காத்தான்குடி முதலாம் மீனவர்கள் சிலர் இன்று சனிக்கிழமை காலை வாவியின் நடுப்பகுதியில் வைத்து இளைஞனின் சடலத்தை கண்டுள்ளனர்.

இதன் பின்னர் காத்தான்குடி பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் எம். இஸ்ஹாக் தலைமையில் பொலிசார் காத்தான்குடி முதலாம் குறிச்சி அல் அக்ஷா மீனவர் சங்க பிரதிநிதிகள் மற்றும் மீனவர்களுடன் படகில் சென்று சடலத்தை மீட்டுள்ளனர்.

இதையடுத்து சடலம் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டு பின்னர் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதுடன் இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்றுவருவதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

(எம்.எஸ்.எம். நூர்தீன்)

No comments:

Post a Comment

Post Bottom Ad