ஏ.எச்.ஏ. ஹுஸைன்
அம்பாறை பிராந்தியத்தில் உள்ள அரச வங்கியொன்றின் சில கிளைகளில் கடமை புரியும் ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டதன் காரணமாக அவ்வங்கிக் கிளைகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.
கல்முனையில் அமைந்துள்ள மேற்படி வங்கியின் முகாமையாளர் உட்பட 06 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை புதனன்று (24.02.2021) அடையாளம் காணப்பட்டதை அடுத்து அவ் வங்கி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
இவர்களுக்கான பீசீஆர் பரிசோதனைகள் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டதுடன் அதன் அறிக்கை புதன்கிழமை வெளியிட்டதன் பின்னரே தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் வங்கி கிளையையும் மூடுவதற்கு சுகாதார துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
புதன்கிழமை அவ்வங்கிக்கு வந்த சுகாதார அதிகாரிகள் வங்கியிலிருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களை வெளியேற்றியதுடன் தொற்றாளர்களென அடையாளம் காணப்பட்டோரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்தனர்.
அதேவேளை சாய்ந்தமருதுவில் அமைந்துள்ள மேற்படி வங்கிக் கிளையின் ஊழியர்கள் சிலருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளமை கடந்த வாரம் அடையாளம் காணப்பட்டதையடுத்து அக்கிளையும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளமை தெரிந்ததே.
இதேவேளை கடந்த சில வாரங்களுக்கு முன்பு காரைதீவில் அமைந்துள்ள மேற்படி அரச வங்கியின் கிளை ஊழியர்கள் மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அவ்வங்கியும் மூடப்பட்டிருந்து பின்னர் புதன்கிழமை 24.02.2021 முதல் வழமைபோல் அவ்வங்கி திறக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment