சரத் வீரசேகரவின் செயற்பாடுகளே எமக்கு தனித் தமிழீழத்தைப் பெற்றுத் தந்துவிடும் - அழிக்க அழிக்க மீண்டெழுவோம் என்ற செய்தியை தமிழ் மக்கள் இலங்கைக்கும் உலகத்திற்கும் சொல்லியுள்ளார்கள் : செல்வம் எம்.பி. - News View

About Us

About Us

Breaking

Friday, February 19, 2021

சரத் வீரசேகரவின் செயற்பாடுகளே எமக்கு தனித் தமிழீழத்தைப் பெற்றுத் தந்துவிடும் - அழிக்க அழிக்க மீண்டெழுவோம் என்ற செய்தியை தமிழ் மக்கள் இலங்கைக்கும் உலகத்திற்கும் சொல்லியுள்ளார்கள் : செல்வம் எம்.பி.

பொதுமக்கள் பாதுகாப்புத் தொடர்பான அமைச்சர் சரத் வீரசேகரவின் செயற்பாடுகளே எமக்கு தனித் தமிழீழத்தைப் பெற்றுத் தந்துவிடும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சரத் வீரசேகரவின் கருத்து வடக்கு கிழக்கு தமிழர்களை இல்லாதொழிக்க வேண்டும் என்ற நோக்குடையது என்பதால் தமிழீழம் கிடைப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவே தான் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான ஆர்ப்பாட்டத்தில் மக்கள் எழுச்சியாக கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில், போராட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்கள், பொதுமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பொலிஸார் தேடித்தேடி விசாரிக்கிறார்கள்.

நீதிமன்ற உத்தரவை மீறியதாகவும், நீதிமன்றத்தை தமிழர்கள் அவமதித்துள்ளார்கள் எனவும் காட்டுவதற்காகவே இந்த முயற்சி நடைபெறுகின்றது.

ஆனால், இலங்கை அரசாங்கத்தினால் எமது மக்களுக்கு செய்யப்பட்ட அநீதிக்கு எதிராகவும் தமிழ் மக்கள் வாழ்கின்ற இடங்களை புறக்கணிக்கின்ற அல்லது சிங்களக் குடியேற்றங்களை உட்சேர்க்கின்ற செயற்பாட்டையும் வன விலங்கு பறவைகள் சரணாலயம், மகாவலி வலயம், புதைபொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் தமிழரின் மரபுகளை அழித்தல் போன்றவற்றிற்கு எதிராகவுமே மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளார்கள்.

இதேநேரம், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரினால் கொடுக்கப்பட்டுள்ள அறிக்கையானது மிகவும் வலுவான அறிக்கையாக இருக்கிறது. இதனால், மக்கள் புரட்சிகளைத் தடை செய்வதும் அவர்களை அச்சமூட்டுவதும் இந்த ஆர்ப்பட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறுப்புறுரிமைகளை இல்லாது செய்கின்ற வன்முறையாகத்தான் பொலிஸாரின் நடவடிக்கை உள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்புத் தொடர்பான அமைச்சர் சரத் வீரசேகரவின் செயற்பாடுகள் எமக்கு தனித் தமிழீழத்தைப் பெற்றுத் தந்துவிடும். ஏனென்றால், தீர்மானம் நிறைவேற்றினால் ஐ.நா. சபை இரண்டாக உடையும் என்று கூறியிருக்கிறார்.

சரத் வீரசேகரவின் கருத்து, வடக்கு கிழக்கு தமிழர்களை இல்லாதொழிக்க வேண்டும் என்ற நோக்கமே. ஆகவே, தமிழீழம் கிடைப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவே நான் கருதுகின்றேன்.

அதேநேரம், பொலிஸாரின் நடவடிக்கையானது நீதிமன்ற ஆணையை நாம் புறக்கனிக்கின்றோம் என்ற அச்சத்தைக் கொண்டுவந்து எமது மக்கள் போராட்டத்தை மழுங்கடிக்கின்ற மற்றும் ஐ.நா. சபையில் எமது கோரிக்கைகளை இல்லாது செய்கின்ற முயற்சியாகும். இதனால்தான் எமது இளைஞர்களிலும், நாடாளுமன்ற உறுப்பினர்களிலும், பொதுமக்களிலும் கை வைக்கின்றார்கள்.

பொலிஸாரின் அடக்கு முறைகளை கிழக்கு மாகாணம் பொத்துவிலில் உடைத்தெறிந்து அதே எழுச்சியானது பொலிகண்டி வரை இருந்துள்ளது. அது எங்களுடைய வெற்றி.

மக்கள் ஜனநாயக முறையில் கொரோனா தொடர்பான சமூக இடைவெளியைக் கடைப்பிடித்துப் போரட்டத்தை மேற்கொண்டிருக்கின்றார்கள். ஆகவே, இந்தப் போராட்டம் என்பது ஜனநாயக ரீதியில் செய்யப்பட்ட ஒரு விடயம். இந்நிலையில், தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் எந்தவொரு அச்சுறுத்தல்களுக்கும் அடக்கு முறைகளுக்கும் எமது மக்கள் அடிபணிய மாட்டார்கள்.

இலங்கை தேசம் இறுதி யுத்த வெற்றியை பயங்கரவாதத்தை அழித்து விட்டோம் என்று கொண்டாடியது. அத்துடன் பயங்கரவாதத்தை அழிப்பது எப்படி என்று பாடம் எடுக்கப்போவதாகவும் கூறப்பட்டது.

ஆனால், தமிழ் மக்களோ, அழிக்க அழிக்க மீண்டெழுவோம் என்ற செய்தியை சரியான நேரத்தில் எழுச்சி ஊர்வரத்தின் மூலம் இலங்கைக்கும் உலகத்திற்கும் சொல்லியுள்ளார்கள்.

ஆகவே, எமது மக்களை யாரும் அடக்க முடியாது. எங்களுடைய பிரச்சினைகளை இந்த ஜனநாயகப் போராட்டத்தின் ஊடாகத் தெரிவிப்போம். 

இந்நிலையில், உலக நாடுகளும் இந்தியாவும் தமிழர்களுடைய பக்கம் நிற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது இந்த எழுச்சிப் பேரணியின் நோக்கமாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment