(எம்.ஆர்.எம்.வசீம்)
ஆட்சியாளர் நாட்டின் நிர்வாகிகளே அன்றி உரிமையாளர்கள் அல்ல என்பதை அரசாங்கம் உணர்ந்து செயற்பட வேண்டும். கிழக்கு முனையத்தை பாதுகாத்தது போல் நாட்டின் ஏனைய வளங்களை பாதுகாப்பதற்கும் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 23 தொழிற்சங்கங்களும் இணைந்து போராடியதாலேயே துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பாதுகாத்துக் கொள்ள முடிந்தது. எம்மை பிளவுபடுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவற்றுக்கு யாரும் துணைபோகவில்லை. இந்த ஒற்றுமை தொடர்ந்து இருக்க வேண்டும்.
நாட்டில் இருக்கும் ஏனைய வளங்களை விற்பனை செய்ய முற்பட்டாலும் துறைமுக தொழிற்சங்கங்கள் அதற்காக ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நாங்கள் எமது பலத்தை காட்டியிருக்கின்றோம். அதனால் அரசாங்கம் எதிர்காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அதனை தடுத்து நிறுத்துவோம்.
அத்துடன் நாட்டின் ஆட்சியாளர் என்பது தற்காலிக நிர்வாகிகளாகும். மாறாக அவர்கள் நாட்டின் உரிமைக்காரர்கள் அல்ல. நாட்டின் வளங்களை விற்பதற்கு அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.
நாட்டை அபிவிருத்தி செய்வதற்கே இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவிக்கின்றனர். ஆனால் நாடு அபிவிருத்தியடைந்திருப்பதை காணமுயவில்லை. நாங்கள் சிறு வயதில் இருந்தே எமது நாடு அபிவிருத்தி அடைந்துவரும் நாடு என்றே தெரிவிக்கப்பட்டது. தற்போதும் அவ்வாறே தெரிவிக்கின்றனர்.
எனவே எமது வளங்களை விற்பனை செய்து நாட்டை அபிவிருத்தி செய்ய தேவையில்லை. எமது வளங்களை அவ்வாறே பாதுகாத்து வந்தாலே அதன் மூலம் நாட்டுக்குள் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி அபிவிருத்தி செய்யலாம். எமது வளங்களை விற்பனை செய்து வெளிநாடுகளில் கையேந்த தேவையில்லை. அதனால் அரசியல்வாதிகள் நினைத்த பிரகாரம் செயற்பட இடமளிக்க முடியாது.
கிழக்கு முனையம் தொடர்பில் அரசாங்கத்தின் மீது விரக்தியடைந்திருக்கின்றோம். அதனை வெற்றி கொண்டமை மகிழ்ச்சியாக இருந்தாலும் எதிர்காலத்திலும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் நாங்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment